தமிழ் சினிமா தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 200 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இவர்தான் மூளையாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
போதைப் பொருள் தயாரிப்புக்குத் தேவைப்படும் வேதிப் பொருட்களை அன்றாட அத்தியாவசிய தேவைக்கான பொருட்களின் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் கும்பல் மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் மறைந்திருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, கடந்த மாதம் 15ம் தேதி அங்கு அதிரடியாக நுழைந்த போலீசார் அங்கிருந்த மூன்று பேரை கைது செய்தனர். அவர்கள் சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் எனத் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து போதைப் பொருள் தயாரிப்புக்கான 50 கிலோ முக்கிய வேதிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு சந்தை மதிப்பில் இரண்டாயிரம் கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
அதையடுத்து, ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்து வந்ததாகக் சொல்லப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக சென்ற மாதம் 26ம் தேதி ஜாபர் சாதிக்கை நேரில் ஆஜராகும்படி போதைப் பொருள் கடத்தல் பிரிவு போலீசார் அவரது வீட்டில் சம்மன் பேப்பரை ஒட்டி இருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. அதனால் அவரையும் அவரது கூட்டாளிகளையும் பிடிக்க தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ஜாபர் சாதிக் தற்போது ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன.
திமுகவின் முன்னாள் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த, ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்ட உடனேயே அவர் திமுகவிலிருந்து நிரந்தமாக நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.