சிரியாவின் உள்நாட்டு போரினால் அங்குள்ள கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகள், சாலைகள் ஆகியவை நிலைகுலைந்து இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
உலகெங்கும் போர்கள் நடைபெற்று வருகின்றன. நாடுகளுகுள்ளும், உள்நாட்டுக்குள்ளும் போர்கள் நடைபெறுகின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படை, சமீபத்திய தீவிர தாக்குதல் மற்றும் அரசுப் பிடியில் இருந்த நகரங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக அவருடைய சாம்ராஜ்ஜியம் ஒரு முடிவுக்கு வந்தது.
அந்தவகையில் கடந்த 8ஆம் தேதி, தலைநகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அதிபராக இருந்த அசாத், நாட்டை விட்டு வெளியேறினார்.
இதனால், இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இதனையடுத்து சிரியாவிலிருந்து வெளியேறி பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வந்த மக்கள் மீண்டும் சிரியாவிற்கு திரும்பி வருகின்றனர். இதனை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம் தேதி வரை இடைக்கால அரசு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தப்பிச் சென்ற பஷார் அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்தநிலையில், சிரியாவின் முன்னாள் அதிபா் அல் அசாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் கிளா்ச்சிப் படையினருக்கும் இடையிலான மோதலில் 17 போ் உயிரிழந்தனா். இது சிரியாவின் தற்போதைய அரசுக்கு மிகவும் தலைவலியாக அமைந்திருக்கிறது. இதேபோல்தான் இருதரப்பினருக்கும் இடையே இரண்டு வாரங்களுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தாலும், அங்கு ஏற்பட்ட சேதங்களை காட்டும் விதமாக சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஏராளமான கட்டுமானங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. தலைநகர் டமாஸ்கஸில் சேதமடைந்துள்ள குடியிருப்புப் பகுதிகள், மக்கள் நடமாட்டம் இன்றி தென்படும் சாலைகள், புழுதி படர்ந்து காணப்படும் பகுதிகள் ஆகியவற்றின் பருந்துப் பார்வைக் காட்சிகள், நாட்டில் நிலவும் மோசமான சூழலை உலக மக்களுக்கு காட்டியுள்ளது.
போர் முடிந்தாலும், அதனால் ஏற்பட்ட விளைவுகளை சரிசெய்து சிரியா எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என்பதே பெரிய கேள்விக் குறியாக உள்ளது.