நாசாவின் விண்கலம் ஒன்று சூரியனுக்கு அருகில் சென்று சாதனை படைத்திருக்கிறது.
சூரியன் குறித்தான பல விஷயங்களை தெரிந்துக்கொள்ள உலக நாடுகள் பல ஆராய்ச்சிகள் இன்றும் செய்துக் கொண்டுதான் வருகின்றன. அந்தவகையில் அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா சூரியனை அதன் அருகில் சென்று ஆய்வு செய்ய 2018ம் ஆண்டு ஒரு விண்கலத்தை சூரியனை நோக்கி அனுப்பியது. அந்த விண்கலத்தின் பெயர் பார்க்கர் சோலார் ப்ரோப் ஆகும்.
இந்த விண்கலம் மணிக்கு சுமார் 6,92,300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்தது. மனிதர்களால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட அதிவேகமான பொருட்களிலேயே இதுதான் மிகவும் வேகமாக சென்றிருக்கிறது. இது மிகப்பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது.
இந்த விண்கலம் தற்போது சூரியனின் மிக அருகில் இதுவரை அடைய முடியாத அளவு நெருக்கத்திற்கு சென்றுள்ளது. அதாவது சூரியனிலிருந்து 6.1 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் பார்க்கர் விண்கலம் சென்றுள்ளது. ஏனெனில் இந்த விண்கலத்தின் மேற்பரப்பில் உள்ள கவசமானது 1,377 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால், மனிதர்களால் அனுபப்பட்ட விண்கலங்களில் சூரியனுக்கு மிக அருகில் சென்ற ஒரே விண்கலம் இதுதான் என்று தெரியவந்துள்ளது. அந்த விண்கலத்தில் இருந்து கிடைத்த தரவுகளை ஆய்வு செய்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாசா கூறியுள்ளதாவது, “சூரியனுக்கு மிக அருகில் நடத்தப்படும் இந்த ஆய்வில், பார்க்கர் விண்கலம் பல்வேறு அளவீடுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவீடுகள், சூரியனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள வான்பொருட்கள் கோடிக்கணக்கான டிகிரி வரை வெப்பமடைவது எப்படி என்பதை விஞ்ஞானிகள் நன்கு புரிந்துகொள்ள உதவும்.
மேலும் சூரியக் காற்றின் (சூரியனில் இருந்து தொடர்ச்சியாக வெளிப்படும் துகள்கள்) தோற்றத்தைக் கண்டறிய இது உதவும். அதோடு, அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் துகள்கள் ஒளி வேகத்திற்குக் கிட்டத்தட்ட ஈடான வேகத்தை எவ்வாறு பெறுகின்றன என்பதைக் கண்டறியவும் உதவும்.” என்று கூறியுள்ளது.
மேலும் நாசாவின் அறிவியல் துறை தலைவர் டாக்டர் நிக்கோலா பேசுகையில், “பல நூற்றாண்டுகளாக மக்கள் சூரியனைப் பற்றிய ஆய்வுகளைச் செய்துள்ளனர். ஆனால் நேரடியாகச் சென்று அதை ஆய்வு செய்யாத வரை, அதன் வளிமண்டலத்தைப் பற்றி நம்மால் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியாது. “ என்று பேசியுள்ளார்.