மத்திய அரசு பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் E20 திட்டத்தை முழுமையாக அமல்படுத்திய நிலையில், வாகனங்கள் பழுதாகும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 'E20 ஜனதா கட்சி' என்ற புதிய இயக்கம் உருவாகியுள்ளது.
அதாவது E20 பெட்ரோலுக்கு பதிலாக 100 சதவீதம் பெட்ரோலை விருப்ப தேர்வாக விற்பனை செய்யக்கோரி ‘E20 ஜனதா பார்ட்டி’ என்ற டிஜிட்டல் இயக்கம் மக்கள் மத்தியில் ஆதரவை பெற்று வருகிறது. நிதின் கட்கரி ராஜினாமா கோரியும், ஆகஸ்ட் 4 அன்று டெல்லி பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உருவான கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில், தற்போது மத்திய அரசுக்கு அடுத்த தலைவலியாக E20 பெட்ரோலுக்கு எதிராக உருவான புதிய இயக்கமாக 'E20 ஜனதா பார்ட்டி' இளைய தலைமுறையினரிடையே விரைவாகப் பரவி வருகிறது.
குறிப்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, இந்த புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும், E20 கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இயக்கம் வலியுறுத்தி உள்ளது. மேலும் சுத்தமான பெட்ரோல் அல்லது டீசலைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வாகன ஓட்டிகளுக்கு வழங்க வேண்டும் என்று முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
E20 ஜனதா பார்ட்டி, பெட்ரோலில் 20% எத்தனால் (எத்தனால் கலப்பு) கலக்கப்படுவதை எதிர்த்தும், நுகர்வோர் சுதந்திரம் மற்றும் மாற்று எரிபொருள் கோரியும் குரல் கொடுக்கிறது. E20 பெட்ரோலால் மைலேஜ் குறைவதுடன் வாகன எஞ்சினும் பாதிக்கப்படுவதாக கூறி பல வாகன ஓட்டிகள் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
எக்ஸ் தளத்தில் 38,000ம் மேற்பட்ட ஃபாலோயர்களும், இன்ஸ்டாகிராமில் 3.82 லட்சம் ஃபாலோயர்களும் என சமூக வலைத்தளத்தில் இந்த E20 ஜனதா பார்ட்டிக்கு நிமிடத்துக்கு நிமிடம் ஆதரவு அதிகரித்து வருகிறது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைப் போலவே, மீம்கள் (Memes) மற்றும் இணையப் பிரச்சாரங்கள் மூலம் இந்த இயக்கம் இளைய தலைமுறையினரிடையே விரைவாகப் பரவி வருகிறது.
மத்திய பாஜக அரசு, எத்தனால் கொள்கையை நாடு முழுவதும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. கரும்பு, மக்காச்சோளம், அரிசி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் குறிப்பிட்ட சதவீதத்தில் கலந்து வழங்குவதுதான் மத்திய அரசின் EPP கொள்கை. அதன்படி பெட்ரோலில் எத்தனால் கலப்பு என்பது 2013-14 ஆம் ஆண்டில் 1.5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது 2025-26-ல் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.
E20 திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பெட்ரோலில் 200 மி.லி எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை குறைக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் எனினும் E20 பெட்ரோல் பாதுகாப்பானது.
எஞ்சினுக்கு சேதம் விளைவித்தாக அறிவியல் ஆதாரம் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேசமயம், பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் பழைய வாகனங்களின் மைலேஜ் குறைகிறது, வாகனங்களில் என்ஜின் பாகங்களில் அதிக தேய்மானம் ஏற்படுகிறது என்று வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 20% எத்தனால் கலந்த பெட்ரோலை மட்டுமே வாங்க வேண்டும் என நிர்பந்திக்காமல் குறைந்த அளவிலான எத்தனால் கலந்த பெட்ரோலை வாங்குவதற்கு நுகர்வோருக்கு சுதந்திரம் தேவை என்ற குரல் வலுத்து வருகிறது.
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து கடந்த ஒரு மாதமாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை, முன் மாதிரியாக வைத்து எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் கட்டாயம் ஆக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் E20 ஜனதா கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி டாக்ஸி மற்றும் டிரான்ஸ்போர்ட்டர்ஸ் சங்கம் சார்பில் வரும் ஆகஸ்ட் 4-ம்தேதி நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் E20 ஜனதா கட்சி ஆர்பாட்டத்தை அறிவித்துள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.