இந்தியாவின் E20 எத்தனால் கலப்புத் திட்டம் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விரிவாக விளக்கம் அளித்துள்ளது. அதிகப்படியான நீர் நுகர்வு, இயந்திரச் சேதம், சுற்றுச்சூழல் அபாயங்கள் மற்றும் எரிபொருள் பாதுகாப்பு தொடர்பான கூற்றுக்களை அது நிராகரித்தது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்படும் E20 திட்டம், அறிவியல் சான்றுகள், விரிவான சோதனைகள் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறை ஆகியவை அடிப்படையினாலாது என்று கூறியது.
ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய 10,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்ற கூற்றுகளை நிராகரித்த அமைச்சகம், தேசிய உணவு பாதுகாப்பு திட்ட தேவையை பூர்த்தி செய்த பிறகு உபரியாக உள்ள அரிசிதான், எத்தனால் உற்பத்திற்கு திருப்பி விடப்படுகிறது என்று கூறியது.
ஒரு லிட்டர் எத்தனால் தயாரிப்புக்கு 3 முதல் 5 லிட்டர் பதப்படுத்தப்பட்ட தண்ணீர் தான் பயன்படுத்தப்படுகிறது. அந்த தண்ணீரும் மறுசுழற்சி செய்யும் 'பூஜ்ஜிய திரவ வெளியேற்ற' (Zero Liquid Discharge) அமைப்புகளின் கீழ் அவை பெருகிய முறையில் செயல்படுகின்றன என்றும் அது கூறியது.
அமெரிக்கா, பிரேசில், கனடா, தாய்லாந்து, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நிலைகளில் எத்தனால் கலப்பைப் பின்பற்றி வருவதாக அது சுட்டிக்காட்டியது.
எத்தனாலில் 40 சதவீதத்துக்கு மேல், சோளத்தின் பங்களிப்பு இருக்கிறது. சோளத்தில் நீர்ப்பாசனத்துக்கு அரிசிக்கு தேவையானதை விட குறைவாகவே தண்ணீர் தேவைப்படும்.
வாகன செயல்திறன் குறித்த கவலைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) நடத்திய சோதனைகளில், கார்களில் சுமார் 40,000 கி.மீ. மற்றும் இருசக்கர வாகனங்களில் 20,000 கி.மீ. தூரம் இயக்கி பரிசோதிக்கப்பட்டதில், ஓட்டும் திறன் அல்லது எரிபொருள் சிக்கனத்தில் குறிப்பிடத்தக்க பாதகமான தாக்கம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், என்ஜினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. எத்தனால் சோதிக்கப்படாத எரிபொருள் என்று கூறப்படுவது தவறு. பல பத்தாண்டுகளாக சர்வதேச அளவில் எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. வாகன திறனை எவ்விதத்திலும் பாதிக்காது. மேலும் E20-க்காக அளவீடு செய்யப்பட்ட வாகனங்கள், எத்தனாலின் உயர் ஆக்டேன் மதிப்பீட்டிலிருந்து பயனடையக்கூடும் என்றும் கூறியது.
பழைய வாகனங்களில் சில ரப்பர் பாகங்கள் மட்டுமே சீக்கிரமே மாற்ற வேண்டிய இருக்கும். மைலேஜில் சிறிதளவு மாற்றமே காணப்பட்டது.
E20 எரிபொருளானது(எத்தனால் பெட்ரோல்) என்ஜின்களைச் சேதப்படுத்துகிறது அல்லது வாகன பாகங்களை அரிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பெட்ரோலியம் மற்றும் சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் மேனுஃபேக்சரர்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து ARAI நடத்திய ஆய்வுகளை அமைச்சகம் மேற்கோள் காட்டியது.
E20 எரிபொருளின் பயன்பாடு வாகன வாரண்டி மற்றும் காப்பீடு கோரிக்கை நிராகரிக்கப்படும் என்ற கூற்றுகளையும் அமைச்சகம் நிராகரித்தது. E20-க்காக வடிவமைக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள், பொருந்தக்கூடிய உத்தரவாதம் மற்றும் காப்பீட்டு விதிமுறைகளின் கீழ் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று காப்பீடு நிறுவனங்களும், வானக உற்பத்தி நிறுவனங்களும் தெளிவுபடுத்தியுள்ளதாக அது கூறியது.
E20 எரிபொருளில் சர்க்கரை இருப்பதால் எறும்புகளும் தேனீக்களும் அதனை நோக்கி ஈர்க்கப்படுகின்றன என்று கூறும் சமூக ஊடகப் பதிவுகளுக்குப் பதிலளித்த அமைச்சகம், எத்தானலில் சர்க்கரை எதுவும் இல்லை. எனவே தேனீக்கள் மொய்க்காது. எரிபொருள் டேங்கில் தண்ணீர் ஊடுருவுவதை அனுமதிக்காது.
எத்தனால் உற்பத்தி ஆலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. மேலும், கலக்கப்பட்ட எரிபொருளில் பெட்ரோலின் ஹைட்ரோகார்பன் வாசனையே பிரதானமாக உள்ளது என்றும் அது கூறியது.
நவீன வாகனங்கள் மற்றும் எரிபொருள் விநியோகக் கட்டமைப்புகளில் நீர் உள்ளே நுழைவதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதால், E20 எரிபொருள் தொட்டிகளுக்குள் நீர் புகும் அபாயத்தை அதிகரிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளையும் அமைச்சகம் நிராகரித்தது.
அதேபோல, பெட்ரோலுடன் கரும்புச் சாறு கலக்கப்படுவதாகக் கூறப்படும் வைரல் காணொளிகள் போலியானவை என்று குறிப்பிட்ட அரசு, எரிபொருள் எத்தனால் தொழில்முறை செயல்முறைகள் மூலம் தயாரிக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின்படி கலக்கப்படுகிறது என்று தெரிவித்தது.
அமைச்சகத்தின் தகவலின்படி, 2014-15 முதல் எத்தனால் கலப்புத் திட்டமானது ரூ. 1.9 லட்சம் கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும், விவசாயிகளுக்கு ரூ. 1.6 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை வழங்கவும், கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை சுமார் 930 லட்சம் மெட்ரிக் டன்கள் குறைக்கவும், 310 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் உதவியுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
2013-14-ல் சுமார் 1.5 சதவீதமாக இருந்த கலப்பு அளவு அதிகரித்து, பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு என்ற இலக்கை இந்தியா நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே எட்டியதாக அரசு கூறியுள்ளது.
நாட்டின் நிறுவப்பட்ட எத்தனால் உற்பத்தித் திறன் சுமார் 2,000 கோடி லிட்டராக உயர்ந்துள்ளதாகவும், 2025-26 எத்தனால் விநியோக ஆண்டில் கொள்முதல் அளவு 1,200 கோடி லிட்டரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.