கேரளாவிலிருந்து சென்னை வந்துக்கொண்டிருக்கும்போது விமானத்திலேயே இரு பயணிகளிடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பேருந்தில்தான் பயணிகள் அடிக்கடி சண்டைப் போட்டுக் கொள்வார்கள். ஏனெனில், அதிகம் பேர் ஏறும்போது பயணிகளுக்கிடையே சங்கடங்கள் ஏற்பட்டு சண்டை ஆரம்பிக்கும். இதனை நீங்கள் கூட்டமாக இருக்கும் பேருந்துகளில் அடிக்கடி பார்க்கலாம். அதேபோல் அதிக கூட்டமாக இருக்கும் ரயில்களிலும் சில நேரம் பயணிகளிடையே சண்டைகள் நிகழும்.
ஆனால், அவற்றைத்தவிர கப்பல், விமான போக்குவரத்துகளில் யாருக்கும் எந்த சங்கடங்களும் நிகழ வாய்ப்பே இல்லை என்பதால் சண்டையே வராது. ஒருவேளை அப்படி பயணிகளுக்கிடையே சண்டை வந்தால், அது அவர்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட விஷயங்களாகவே இருக்கும். ஆகையால், விமான போக்குவரத்து துறையினர் அவர்களை கடுமையாக கண்டிப்பார்கள்.
அப்படித்தான் தற்போது இரு பயணிகளுக்கிடையே நடந்த சண்டையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 171 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்த கேரளத்தைச் சோ்ந்த 35 வயது டேவீஸ் என்பவருக்கும், அமெரிக்காவைச் சோ்ந்த 32 வயது கஸன் எலியா என்பவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் அதில் ஒருவர் வெடிகுண்டு வீசிவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த விமான பணிப்பெண்கள் சென்னை விமான நிலைய கட்டுபாடு அறைக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். ஆகையால், சென்னை விமான நிலையத்தில் அதிரடிப்படை வீரா்கள், வெடிகுண்டு நிபுணா்கள், விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலைய போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த விமானம் இரவு 12 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருக்கும் 'ரிமோட் பே' எனப்படும், விமான நிலைய ஒதுக்குப்புறமான இடத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு ஏற்கனவே தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் வேகமாக ஏறி அந்த இரண்டு பேரையும் கையும் காலுமாக பிடித்து சோதனை செய்தனர். 2.30 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. பின்னரே பயணிகள் அனைவரும் விமானத்தைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்கள். விமானத்தில் நடுவானில் மோதிக் கொண்ட இரு பயணிகளையும் பாதுகாப்புப் படையினா் பிடித்து விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.