
நடிகை, பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பல்வேறு துறைகளில் தன்னை திறமையை வெளிப்படுத்தி வருபவர் ஸ்ருதிஹாசன். பிரபல நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மூத்த மகள் தான் நடிகை ஸ்ருதிஹாசன்.
சென்னையில் பள்ளி படிப்பையும், மும்பையில் கல்லுரி படிப்பையும் முடித்த ஸ்ருதிஹாசன் கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார். ஸ்ருதிஹாசன் தனது 6-வது வயதில்1992-ம் ஆண்டு வெளியான தனது தந்தையின் படமான தேவர் மகனில் 'போற்றிப் பாடடி பொண்ணே' என்ற தனது முதல் பாடலை பாடியதன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்.
அதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும், ஹே ராம் (தமிழ் மற்றும் இந்தி), என் மன வானில், வாரணம் ஆயிரம், லக் (இந்தி) மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடி நடிப்பு மட்டுமல்ல இசை மற்றும் பாடகியாகவும் தன்னை சினிமா துறையில் நிலைநிறுத்தி கொண்டார். இவர் தனது தந்தை பெயரை பயன்படுத்தி சினிமா துறையில் முன்னேற விரும்பாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2009-ம் ஆண்டு வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு இசையமைத்தன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஸ்ருதிஹாசன் இந்த படத்திற்கு துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் ‘கூலி' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பிரபாசுக்கு ஜோடியாக ‘சலார்' படத்தில் நடித்ததன் மூலம் இவர் பான் இந்தியா நடிகையாகவும் மாறியுள்ளார்.
பூமர் விமன் நிறுவனத்தின் தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வவும், அதன் விற்பனையை அதிகரிக்கவும், பெண்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஸ்ருதிஹாசனை விளம்பர தூதுவராக பூமர் பேஷன்ஸ் நிறுவனம் நியமித்துள்ளது.
ஏற்கெனவே ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஸ்ருதிஹாசன், அவரை பிரிந்த பிறகு, சாந்தனு ஹசாரியா என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் அவரை பிரிந்து விட்டதாக அறிவித்து ரசிகர்களை அதிர்சியடைய செய்தார்.
தனது தந்தையை போலவே, எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர் நடிகை ஸ்ருதிஹாசன். இந்நிலையில் அவரிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்போருக்கு காட்டமாக பதில் அளித்து அனைவரின் வாயையும் அடைத்துள்ளார்.
அதில், "என் கல்யாணத்திற்கு கரண்ட் பில் கட்ட போறீங்களா, இல்ல சாப்பாடு போட போறீங்களா, இல்ல இன்விடேஷன் அடிக்க போறீங்களா? இது எதையும் நீங்க செய்ய போறது இல்ல. அப்போ எதுக்கு திருமணம் குறித்து கேள்வி கேக்குறீங்க. விட்டுடுங்க. இனி இது போன்று கேள்வி கேட்காதீங்க" என்று கூறியுள்ளார்.