தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் புதிய அறிவிப்பு ஒன்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும், நடப்பு கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்த தமிழ்நாடு அரசு, மாநிலத்திற்கென பிரத்யேக கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக, ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பல தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டறிந்து, 650 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையைத் தயாரித்தது.
கடந்த 2024 அக்டோபரில் தயாரான இந்த அறிக்கை, ஜூலை 1-ஆம் தேதி தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அதன் முக்கிய அம்சங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8, 2025) சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் வெளியிட்டார்.
மேலும், 8-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் 'ஆல் பாஸ்' நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த முடிவுகள் மாணவர்களின் கற்றல் சுமையைக் குறைக்கவும், தொடக்கக் கல்வியில் இடைநிற்றலைத் தடுக்கவும் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது, மாணவர்களின் கவனம் முழுவதுமாக 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குவிவதற்கு உதவும் என கல்வி வல்லுநர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம், 8-ஆம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' தொடர்வது, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக அமைந்துள்ளது. சில மாநிலங்கள் ஏற்கனவே 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை அமல்படுத்திவிட்ட நிலையில், தமிழ்நாட்டின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த திடீர் அறிவிப்பால், மாணவர்களும், பெற்றோர்களும் ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுபுறம் கல்வியின் தரம் பாதிக்கப்படுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த அறிவிப்பு மாநிலத்தின் ஒட்டுமொத்த கல்வி முறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.