அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளதால், அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லறை வணிக நிறுவனங்களான அமேசான், வால்மார்ட் உள்ளிட்டவை இந்தியாவிலிருந்து வாங்குவதை நிறுத்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திடீர் வரி உயர்வால் இந்திய ஏற்றுமதித் துறை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
அமெரிக்கா ஏற்கனவே 25% வரி விதித்திருந்த நிலையில், தற்போது மேலும் 25% வரி உயர்த்தப்பட்டு, மொத்த வரி 50% ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதே இந்த வரி உயர்விற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கையால், இந்தியாவின் ஜவுளி, ரத்தினங்கள், நகைகள், தோல் பொருட்கள், கடல் உணவுகள் போன்ற முக்கிய ஏற்றுமதித் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க வாங்குபவர்கள் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் மற்றும் கடிதங்களில், அடுத்த அறிவிப்பு வரும் வரை ஜவுளி மற்றும் ஆடைகளை அனுப்புவதை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வரி விதிப்பால் இந்தியப் பொருட்களின் விலைகள் அமெரிக்க சந்தையில் 30-35% வரை உயரும். இதனால் அமெரிக்காவிற்கான ஆர்டர்கள் 40 முதல் 50% வரை குறைய வாய்ப்புள்ளது. இந்திய ஏற்றுமதித் துறைக்கு சுமார் $4-5 பில்லியன் இழப்பு ஏற்படலாம் என தொழில்துறை வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.
வெல்ஸ்பன் லிவிங், கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ், இண்டோ கவுன்ட் மற்றும் ட்ரைடென்ட் போன்ற முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள், தங்கள் மொத்த வருவாயில் 40 முதல் 70% வரை அமெரிக்க சந்தையிலிருந்து பெறுகின்றன. இந்த நிறுவனங்கள் தற்போது தங்கள் வர்த்தகத்தை வங்கதேசம் மற்றும் வியட்நாம் போன்ற போட்டி நாடுகளிடம் இழக்க நேரிடும் என அஞ்சுகின்றன. அந்த நாடுகளுக்கு சுமார் 20% மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. மார்ச் 2025-இல் முடிவடைந்த நிதியாண்டில், இந்தியாவின் மொத்த ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 28% அமெரிக்காவிற்கு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு $36.61 பில்லியன் ஆகும்.
இந்த வரி உயர்வு ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை "நியாயமற்றது" மற்றும் "துரதிர்ஷ்டவசமானது" என்று கண்டித்துள்ளது. இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமா என்பது வர்த்தக சமூகத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.