'உலக அளவில் தொழில் நிறுவனங்களின் முதல் முகவரி தமிழகம்' - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

Tata motors Panapakkam sipcot
Tata motors Panapakkam sipcot
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 1,213 ஏக்கர் பரப்பளவில் நெடும்புலி, துறையூர் பெருவளையம் ஆகிய கிராமங்களை இணைத்து பனப்பாக்கம் சிப்காட் வளாகம் அமைக்கப்படுகிறது. இதில் 470 ஏக்கர் பரப்பளவில் 9 ஆயிரம் கோடி மதிப்பில் டாடா மோட்டார்ஸ், ஜாகுவார், லேண்ட்ரோவர் கார் தயாரிக்கும் கம்பெனி மற்றும் அதே வளாகத்தில் 400 கோடி மதிப்பீட்டில் காலணி தொழிற்சாலை அமைய உள்ளது. இவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிய பின் பேசியதாவது;

தமிழகத்தில் டாடா நிறுவனம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அந்நிறுவனம், தமிழகத்தின் மீது எந்த அளவு நம்பிக்கை வைத்திருக்கிறது என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது உலகில் உள்ள எல்லா நிறுவனங்களுக்கும் தமிழகம் தான் முதல் முகவரியாக உள்ளது. டாடா கம்பெனியின் சேர்மன் சந்திரசேகரன். இவர் நாமக்கல் மாவட்ட விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அரசு பள்ளியில் படித்தவர். இப்படிப்பட்ட ஒருவர் உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் உயர்ந்த பதவியில் இருப்பது தமிழகத்திற்கு பெருமை. எஃகு, தகவல் தொழில்நுட்பம், விமான போக்குவரத்து, ஆட்டோமொபைல்ஸ் உட்பட பல துறைகளில் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடா நிறுவனம் இயங்கி வருகிறது.

தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும் டாடா நிறுவனம் இணைந்து உருவாக்கிய டைட்டன் நிறுவனம், கடிகாரங்கள் மற்றும் கண் பராமரிப்பு பிரிவுகளில் சிறந்து விளங்குகிறது. 'நான் முதல்வன்' திட்டத்தில் டாடா நிறுவனம் இணைந்து செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள இந்த நிறுவனத்தின் பணிகளை விரைந்து முடித்து விரைவில் திறப்பு விழா காண வேண்டும். டாடா நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலீடு செய்தது போல பிற மாவட்டங்களிலும் முதலீடு செய்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். தமிழகம்தான் இந்தியாவின் வாகன உற்பத்தி தலைநகரம். எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தலைநகரமும் தமிழகம் தான். நாட்டின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வைக்கிறது. நாட்டிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. முதலீடுகளை ஈர்ப்பது மட்டும் நமது நோக்கம் அல்ல. அதை விரைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். தமிழக இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக அரசு தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இதையும் படியுங்கள்:
தென் ஆப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி!
Tata motors Panapakkam sipcot

முன்னதாக புதிய தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்ட முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை 10:40 மணிக்கு சிப்காட் வளாகத்துக்கு வந்தார். அவரை திமுக நிர்வாகிகள் ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்றனர். நுழைவாயில் அருகே அமைக்கப்பட்ட மேடையில் முதல்வர் ஸ்டாலின் சிறிது நேரம் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் டாடா நிறுவன சேர்மன் சந்திரசேகரன், அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, டிஆர்பி ராஜா, தலைமைச் செயலர் முருகானந்தம், தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலர் அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில்ராஜ், எம்எல்ஏக்கள் முனிரத்தினம் (சோளிங்கர்) ஈஸ்வரப்பன் (ஆற்காடு) ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா, எஸ்பி கிரண் சுருதி, டிஆர்ஓ சுரேஷ், அரக்கோணம் சப் கலெக்டர் பாத்திமா உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com