2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தாயுமானவர் திட்டம். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே ஏழை எளிய குடும்பங்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் சென்று சேர வேண்டும் என்பது தான்.
தாயுமானவர் திட்டம் மூலம் வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்தார். வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் குடும்ப அட்டைகளுக்கு தாயுமானவர் திட்டத்தின் மூலம் அவர்களின் வீடுகளுக்கு சென்று குடிமைப் பொருட்கள் வழங்கப்படும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள வயதான மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ரேசன் பொருட்களை வழங்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை வரும் 12 ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 12.8.2025 அன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.
70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம், நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.