

கோடைக்கால மின் தேவையை பூர்த்தி செய்வது தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார், மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டின் மின் தேவை மற்றும் மின் உற்பத்தி தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மின்வாரியத்தின் நிதி நெருக்கடி, நிலுவையில் உள்ள திட்டங்கள் மற்றும் மின்கட்டண மாற்றங்கள் குறித்து இந்த ஆலோசனையில் விரிவாக விவாதிக்கப்பட்டது. முந்தைய காலங்களில் மின்சார வாரியத்திற்கு ஏற்பட்ட கடன் சுமை மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் அளவு மற்றும் முந்தைய ஆண்டுகளின் நிதிநிலை அறிக்கைகள் குறித்து அதிகாரிகள் முதல்வரிடம் விளக்கினர். கோடைக்காலம் காரணமாக மாநிலத்தில் மின்சாரத்தின் தேவை தொடர்ந்து உச்சத்தில் உள்ள நிலையில், தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான வழிகள் ஆலோசிக்கப்பட்டன. பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதைக் குறைத்து, தமிழ்நாட்டை மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றுவதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்தில் 200 யூனிட்டுகள் இலவசம் உள்ளிட்ட முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிதாக மின்சாரத்துறை பொறுப்பேற்றுள்ள அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், மாநிலத்தை மின் உற்பத்தியில் தற்சார்பு அடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.