

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அரியணை என்பது எப்போதும் வெறும் இருக்கையாகப் பார்க்கப்பட்டதில்லை; அது அதிகாரத்தின், ஆளுமையின், கொள்கையின் அடையாளமாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. அந்த வகையில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜோசப் விஜய், தனது தலைமைச் செயலக அலுவலகத்தில் கொண்டுவந்துள்ள ஒரு எளிய மாற்றம், இன்று ஊடகங்களிலும் பொதுவெளியிலும் பெரும் விவாதப் பொருளாகவும், நவீன நிர்வாகத்தின் குறியீடாகவும் மாறியுள்ளது. அது, அவர் பயன்படுத்தத் தொடங்கியுள்ள 'நவீன எர்கோனமிக் நாற்காலி' (Ergonomic Chair) பற்றியது ஆகும்.
வெள்ளைத் துண்டுக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி:
பல்லாண்டுகளாக இந்திய வி.ஐ.பி கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத அங்கமாக விளங்கியது நாற்காலியின் பின்புறம் விரிக்கப்படும் வெள்ளைத் துண்டு ஆகும். பிரிட்டிஷ் காலத்தில், குளிர்சாதன வசதி இல்லாத கோடை வெப்பத்தில் வியர்வையை உறிஞ்சுவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த வழக்கம், பிற்காலத்தில் ஒரு அதிகார அந்தஸ்தின் அடையாளமாக உருவெடுத்தது. காலங்கள் மாறினாலும், குளிரூட்டப்பட்ட நவீன அறைகள் வந்த பிறகும், நாற்காலியில் வெள்ளைத் துண்டு போடும் வழக்கம் மாறவே இல்லை. அதுவே ஆதிக்க மனநிலையின் குறியீடாகப் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி லிசிப்ரியா கங்குஜம் விடுத்த பொது வேண்டுகோளை ஏற்று, முதலமைச்சர் விஜய் தனது அலுவலக நாற்காலியில் இருந்து அந்த வெள்ளைத் துண்டை அதிரடியாக அகற்றினார். காலாவதியான, எதேச்சாதிகாரத்தை நினைவூட்டும் ஒரு மரபு உடைத்தெறியப்பட்டது. வெள்ளைத் துண்டு அகற்றப்பட்ட அந்த இருக்கை, ஆட்சியாளருக்கும் மக்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் ஒரு எளிய, சமத்துவமான அணுகுமுறையாகப் பொதுமக்களால் பார்க்கப்படுகிறது, பலரும் இதைப் பாராட்டுகிறார்கள்.
நவீன எர்கோனமிக் நாற்காலி:
வழக்கமாக முதலமைச்சர்கள் உபயோகிக்கும் பழைய காலத்து கனமான மர நாற்காலியையும் விஜய் மாற்றியுள்ளார். உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற 'எர்கோனமிக் நாற்காலி' என்ற நவீன நாற்காலியைப் பயன்படுத்துகிறார். மனித உடல் அமைப்பிற்கு எந்த வலியும் தராதபடி அறிவியல் பூர்வமாகச் செய்யப்படும் வடிவமைப்புக்கு 'எர்கோனமிக்ஸ்' என்று பெயர். இந்தப் புதிய நாற்காலி, நீண்ட நேரம் அமர்ந்து கோப்புகளைப் பார்க்கும் ஒரு நிர்வாகிக்குத் தேவையான அனைத்து மருத்துவ மற்றும் தொழில்நுட்ப வசதிகளையும் உள்ளடக்கியது.
'எர்கோனமிக்ஸ் நாற்காலியின் சிறப்புகள்:
இதன் பின்புறம் வளைவாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், நீண்ட நேரம் அமர்ந்திருந்தாலும் முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியில் வலி ஏற்படாது. மேலும், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கருப்பு நிற வலை போன்ற துணி உடலுக்கு வியர்வை வராமல் தடுத்து நல்ல காற்றோட்டத்தைத் தருகிறது. அதோடு, அமருபவரின் உயரத்திற்கும் கை வைக்கும் வசதிக்கும் ஏற்ப இதன் பாகங்களை எளிதாக மாற்றியமைத்துக் கொள்ளும் தொழில்நுட்பமும் இதில் உள்ளது.
தலைமைச் செயலகத்தின் கோப்புகள் வேகம் எடுக்க வேண்டுமானால், அதை இயக்கும் தலைவரின் உடல்நிலையும், மனநிலையும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதை உணர்ந்துதான், இந்த எளிய மாற்றத்தின் மூலம் நவீன உலகிற்குத் தமிழ்நாடு தயாராகிவிட்டதை முதலமைச்சர் விஜய் சத்தமில்லாமல் உணர்த்தியிருக்கிறார். ஆடம்பரமான பழைய அடையாளங்களைக் கடந்து, எளிய அணுகுமுறையோடும் அறிவியல் சிந்தனையோடும் மக்கள் பணியாற்ற வந்திருக்கும் ஒரு புதிய தலைமுறையின் தொடக்கமாகவே இந்த நாற்காலி மாற்றம் பார்க்கப்படுகிறது.