

நாய், பூனை, கிளி வளர்த்த காலம் எல்லாம் எப்போதோ மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் வீடுகளில் யாருமே பார்த்திராத விசித்திரமான பூச்சிகள் மற்றும் ஊர்வனவற்றை வளர்ப்பதுதான் ஒரு பெரிய ட்ரெண்டாக மாறி வருகிறது. அந்த வரிசையில் பலரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு புதிய பொழுதுபோக்குதான் எறும்பு வளர்ப்பு.
இதை விட ஒரு பெரிய ஷாக் என்னவென்றால், இந்த எறும்புகளை வளர்ப்பதற்காகவே சர்வதேச அளவில் மிகப்பெரிய கடத்தல் நெட்வொர்க் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ராணி எறும்புகளை மிக ரகசியமாக பிளாஸ்டிக் டியூப்களில் அடைத்து விமானங்களில் கடத்துகிறார்கள். பார்ப்பதற்கு மிகச் சிறியதாக இருக்கும் ஒரு சாதாரண எறும்பைக் கடத்துவதால் அப்படி என்ன பெரிய லாபம் கிடைத்துவிடப் போகிறது?
எறும்பு பண்ணைகள்!
தற்போதைய காலகட்டத்தில் பலருக்கும் இயற்கைக்கும் இடையேயான தொடர்பு குறைந்துவிட்டது. இதனால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் தங்கள் வீட்டு டிராயிங் ரூம்களில் பெரிய கண்ணாடிப் பெட்டிகளை வைத்து அதில் செயற்கை எறும்பு பண்ணைகளை உருவாக்குகிறார்கள்.
அதற்குள் பிரத்யேகமான மண்ணை நிரப்பி, எறும்புகள் எப்படி தங்களது சுறுசுறுப்பான சாம்ராஜ்யத்தை உருவாக்குகின்றன என்பதையும், எப்படி குகைகளை குடைகின்றன என்பதையும் மணிக்கணக்கில் உட்கார்ந்து பார்ப்பதை ஒரு பெரிய ரிலாக்சேஷனாக நினைக்கிறார்கள். இந்த மாடர்ன் பொழுதுபோக்கிற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுவது அந்த கூட்டத்தின் தலைவியான ராணி எறும்புதான்.
ராணி எறும்புக்கு டிமாண்ட்!
ஒரு எறும்பு கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான வேலைக்கார எறும்புகள் இருந்தாலும், அவை எல்லாமே ராணி எறும்பின் கட்டுப்பாட்டில்தான் இயங்கும். சாதாரண வேலைக்கார எறும்புகளை எவ்வளவுதான் பிடித்து வந்து வீட்டில் விட்டாலும் சில வாரங்களில் அவை இறந்துவிடும்.
ஆனால் உங்களிடம் ஒரு ராணி எறும்பு இருந்தால் அது லட்சக்கணக்கான முட்டைகளைத் தொடர்ந்து இட்டு ஒரு பிரம்மாண்டமான எறும்பு கூட்டத்தையே உங்கள் வீட்டுக்குள் நிரந்தரமாக உருவாக்கிவிடும். சுருக்கமாக சொல்லப்போனால் ராணி எறும்பு என்பது ஒரு உயிருள்ள முட்டை தொழிற்சாலை போன்றது. அதனால்தான் கள்ளச்சந்தையில் மற்ற எறும்புகளை விட ராணி எறும்புகளுக்கு எக்கச்சக்கமான டிமாண்ட் இருக்கிறது.
கோடிகள் புரளும் கள்ளச்சந்தை!
நமது ஊரில் சாதாரணமாக சுற்றும் எறும்புகளுக்கு பெரிய மதிப்பு எதுவும் இல்லை. ஆனால் ஆப்பிரிக்கா, அமேசான் காடுகளில் வாழும் சில அரிய வகை எறும்புகள் பார்ப்பதற்கு மிக பிரம்மாண்டமாகவும் வித்தியாசமான நிறங்களிலும் இருக்கும். இதுபோன்ற வெளிநாட்டு ரகங்களை வளர்ப்பதில் எறும்பு பிரியர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது.
ஒரு குறிப்பிட்ட அரிய வகை ராணி எறும்புக்காக பல ஆயிரங்கள் முதல் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வாடிக்கையாளர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த அதீத பணத்தாசையால்தான் கடத்தல்காரர்கள் சின்னஞ்சிறு டியூப்களுக்குள் ஈரப்பதமான பஞ்சுகளை வைத்து ராணி எறும்புகளை அடைத்து சட்டவிரோதமாக நாடுகளைக் கடத்துகிறார்கள்.
இப்படி ஒரு நாட்டின் பூர்வீக உயிரினங்களைச் சட்டவிரோதமாகப் பிடித்து வேறு ஒரு நாட்டிற்குச் கொண்டு செல்வது அந்த நாட்டின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கும் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். தப்பித்தவறி இந்த வெளிநாட்டு எறும்புகள் புதிய இடத்தில் பல்கிப் பெருகினால், அங்குள்ள உள்ளூர் விவசாயமும் இயற்கையான சமநிலையும் முற்றிலுமாக நாசமாகிவிடும்.
இயற்கையின் சமநிலையைக் குலைக்கும் இதுபோன்ற விசித்திரமான ஆசைகளை மனிதர்கள் இனியாவது கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்.