பெரம்பூர் தொகுதி மக்கள் புகார் அளிக்க பிரத்யேக செயலி..! புகார் அளிப்பது எப்படி..?

"ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கதை உண்டு" – தொகுதி மக்களின் குறைகளை நேரடியாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கொண்டு சேர்க்கும் புதிய டிஜிட்டல் பாலம்.
பெரம்பூர் தொகுதிக்கு பிரத்யேக மொபைல் செயலி
பெரம்பூர் தொகுதிக்கு பிரத்யேக மொபைல் செயலிSource:Dailythanthi
Updated on

பெரம்பூர் தொகுதி மக்களுக்காக பிரத்யேக செயலியை முதலமைச்சர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளார்.

தமிழக முதலமைச்சரும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் மக்களின் தேவைகள், குறைகள் மற்றும் கோரிக்கைகளை எளிதாக பதிவு செய்து, அவற்றின் நிலையை நேரடியாக அறிந்துகொள்ள உதவும் பிரத்யேக மொபைல் செயலி விரைவில் அறிமுகமாகிறது.பொதுமக்கள் பதிவு செய்யும் புகார்கள் மீது அடுத்த மூன்று நாட்களுக்குள் அதாவது 72 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த டிஜிட்டல் முயற்சி தொகுதி மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இச்செயலியின் வாயிலாகப் பொதுமக்கள் பதிவு செய்யும் புகார்கள் அனைத்தும், நேரடியாக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்படும்.

இந்த நவீன செயலி மற்றும் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முதல்வர் விஜய்யின் அலுவலகம் ஆகிய இரண்டையும் வரும் வாரத்தில் தமிழக முதல்வர் அவர்கள் முறைப்படி திறந்து வைக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மக்களின் குரலை நேரடியாக மக்களாட்சி நிர்வாகத்துடன் இணைக்கும் புதிய முயற்சி என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விரைவில் இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது:

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்காக தமிழக வெற்றிக்கழகம் (தவெக) சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக மொபைல் செயலியை (Mobile App) எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விளக்க வீடியோ தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. "ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை உண்டு; ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கதை உண்டு" என்ற வாசகத்துடன், பெரம்பூர் தொகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்து தீர்ப்பதற்கான ஒரு மக்கள் சேவைத் தளமாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இச்செயலியின் மூலம் கல்வி, மருத்துவ உதவிகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் மட்டுமின்றி, தெருவிளக்கு எரியாதது, பழுதடைந்த சாலைகள், குப்பைகள் போன்ற அன்றாடப் பொதுப் பிரச்சினைகளையும் பொதுமக்கள் எளிதாகப் பதிவு செய்ய முடியும். பொதுமக்கள் தங்கள் விவரங்களை நிரப்பி, தங்களது வார்டை தேர்வு செய்து, பிரச்சினைகளைக் குறிப்பிடலாம்; தட்டச்சு செய்ய இயலாதவர்கள், வாய்ஸ் மெசேஜ் (மைக்) மூலமாகவும் தங்களது புகார்களைப் பதிவு செய்யும் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது.

புகார் சமர்ப்பிக்கப்பட்ட சில நொடிகளில் அது தவெக எம்.எல்.ஏ. அலுவலகத்தை அடைந்துவிடும் என்றும், உடனடியாக வாட்ஸ்அப் வழியாக ஒரு பிரத்யேக 'சேவை ஐடி' (Service ID) பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோரிக்கையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அதற்கான முன்னுரிமை மற்றும் தீர்வு வழங்கப்படும் தேதி ஆகியவை அந்த ஐடி-யுடன் அனுப்பப்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது புகார் எண்ணைக் குறிப்பிட்டு, அதன் தற்போதைய நிலவரத்தையும், வார்டு வாரியாக வழங்கப்பட்டுள்ள தீர்வுகளையும் செயலியில் அறிந்துகொள்ள முடியும்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான விஜய் அவர்கள் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். அதில் பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை எதிர்த்துப் போட்டியிட்டு 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஒரு நபர் ஒரு தொகுதியை மட்டுமே வைத்திருக்க முடியும் என்பதால், தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த முதலமைச்சர் விஜய், தற்போது பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து செயல்பட்டு, தொகுதி மக்களுக்காக இந்த அதிரடி டிஜிட்டல் சேவையை தொடங்கிவைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
கட்டா குஸ்தி 2: இரண்டாம் பாகத்தின் பலவீனம் எது? ஒரு முழுமையான திரைக்கதை அலசல்!
பெரம்பூர் தொகுதிக்கு பிரத்யேக மொபைல் செயலி
logo
Kalki Online
kalkionline.com