கட்டா குஸ்தி 2: இரண்டாம் பாகத்தின் பலவீனம் எது? ஒரு முழுமையான திரைக்கதை அலசல்!

முதல் பாகத்தை விட ஏன் பின் தங்கியது கட்டா குஸ்தி 2? காரணங்கள் இதோ.
கட்டா குஸ்தி|katta kushti 2 movie review
கட்டா குஸ்திAI image
Updated on
ரேட்டிங்(3 / 5)

மிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான செண்டிமெண்ட் இருப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவில் 'யோகி பாபு செண்டிமெண்ட்' வலுவாக உள்ளது. படத்தில் தேவை இருக்கிறதோ இல்லையோ, யோகி பாபு இருந்தால் படம் வெற்றி என்ற நம்பிக்கை நிலவுகிறது. தற்போது வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' படத்திலும் யோகி பாபு இருக்கிறார். ஆனால், இவரது கதாபாத்திரத்திற்கும் கதை நகரும் விதத்திற்கும் பெரிய தொடர்பில்லை. யோகி பாபுவின் இந்த செண்டிமெண்ட், இப்படம் வெற்றிபெற கை கொடுத்ததா என்று பார்ப்போம்.

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' படத்தை, முதல் பாகத்தை இயக்கிய செல்ல அய்யாவு இயக்கியுள்ளார்.

கதைக்களம்: குஸ்தி வீராங்கனையாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, தனது திறமையால் ரயில்வேயில் வேலை பெற்று வருகிறார். இவரது கணவர் விஷ்ணு விஷால். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

குழந்தையைத் தன்னைப்போல் குஸ்தி வீராங்கனையாக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா லட்சுமி நினைக்கிறார். ஆனால், குழந்தைக்கு நடனத்தில் ஆர்வம் இருக்கிறது. தந்தை விஷ்ணு விஷால் குழந்தை நடனத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்கிறார். இந்த மாறுபட்ட எண்ணம் தம்பதியினரிடையே விரிசலை உண்டாக்குகிறது.

மறுபுறம், போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஐஸ்வர்யா லட்சுமி மீது அவரது பயிற்சியாளர் பொறாமை கொள்கிறார். இதனால் சில சதி வேலைகளைச் செய்கிறார். ஒரு போட்டியில் ஐஸ்வர்யா லட்சுமி தோற்றுவிடுகிறார். போட்டிக்குப் பின் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் ஊக்க மருந்து உட்கொண்டது தெரிய வருகிறது. அந்த மருந்தை விஷ்ணு விஷால் தனக்குத் தெரியாமல் உணவில் கலந்ததாக ஐஸ்வர்யா லட்சுமி தவறாகப் புரிந்துகொள்கிறார். இதனால் கோபமடைந்த அவர், குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்குச் சென்று விடுகிறார். விஷ்ணு விஷால் இந்தச் சிக்கலில் தனக்குத் தொடர்பில்லை என்பதை எப்படி நிரூபித்தார் என்பதுதான் மீதிக்கதை.

கட்டா குஸ்தி|katta kushti 2 movie review
கட்டா குஸ்திAI image

கட்டா குஸ்தி படத்தின் முதல் பாதியின் பலம்

திரைக்கதை அலசல்: முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் தொடங்குகிறது. படத்தின் முதல் பாதி நல்ல செண்டிமெண்ட், எமோஷன் மற்றும் ஓரளவு சரியான நகைச்சுவையுடன் நகர்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் திரைக்கதை வலுவில்லாமல் திணறுகிறது. நீதிமன்றக் காட்சிகள் நகைச்சுவை என்ற பெயரில் அலுப்பையே தருகின்றன. படத்தின் கிளைமாக்ஸ், முதல் பாகத்தின் காட்சியை நினைவூட்டுவது படத்தின் மிகப்பெரிய குறையாக உள்ளது.

பெண்ணுரிமை மற்றும் விளையாட்டில் பெண்களுக்குத் தர வேண்டிய முக்கியத்துவத்தைப் பேசும் இப்படத்தில், குழந்தையின் வகுப்பு ஆசிரியை வரும் காட்சிகள், நகைச்சுவை என்ற பெயரில் சற்று விரசமாக உள்ளன. இவற்றைத் தவிர்த்திருக்கலாம். ஒரு குடும்பப் பெண் விளையாட்டில் சாதிக்க கணவரின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை முதல் பாதி உணர்த்துகிறது. ஆனால், இரண்டாம் பாதி தேவையற்ற நகைச்சுவை மற்றும் மீண்டும் மீண்டும் வரும் கிளைமாக்ஸ் காட்சிகளால் அந்த உணர்வைத் தக்க வைக்கத் தவறிவிட்டது. முதல் பாகத்தில் இருந்த எதார்த்தமான நகைச்சுவை இதில் இல்லை. இசை மற்றும் பாடல்கள் சுமார் ரகம்.

நடிப்பு: விஷ்ணு விஷால் 'ஹவுஸ் ஹஸ்பண்ட்' கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாகச் செய்துள்ளார். மற்றவர்கள் அவரை கிண்டல் செய்யும்போது எதார்த்தமாகக் கடந்து செல்வதும், பிறகு வருத்தப்படுவதும் என நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. ஐஸ்வர்யா லட்சுமி, முதல் பாகத்திலிருந்த ஆக்ஷனை விட நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். குடும்பப் பொறுப்பு மற்றும் விளையாட்டு என இரண்டையும் கையாளுவதில் ஏற்படும் எமோஷனல் சிக்கல்களைத் தனது நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார்.

காளி வெங்கட், முனீஸ் காந்த் இருவரும் நகைச்சுவையில் ஸ்கோர் செய்கிறார்கள். ஈகோ பிடித்த கணவராக கருணாஸ் நடிப்பு பிரமாதம். பஞ்சாயத்து தலைவியாகப் பெண் இருந்தாலும், அங்கே கணவரின் ஆதிக்கம் இருப்பதை அவர் வரும் காட்சிகள் கண்முன் நிறுத்துகின்றன.

படத்தில் சில பாசிட்டிவான விஷயங்கள் இருந்தாலும், முதல் பாகத்திலிருந்த அந்தப் பரபரப்பும், எதார்த்தமும் இரண்டாம் பாகத்தில் இல்லை. இடைவேளைக்குப் பிறகு திரைக்கதையை வலுவாக்கியிருந்தால் 'கட்டா குஸ்தி 2' கோதாவில் ஜெயித்திருக்கும்.

கவர்ச்சி கலந்த நகைச்சுவையைத் தவிர்த்திருந்தால், இதை ஒரு முழுமையான குடும்பப் படமாகப் பார்த்திருக்கலாம். திரைக்கதையில் இரண்டாம் பாதி தடுமாறுவதால், யோகி பாபு செண்டிமெண்ட் கூட இங்கே முழுமையாகக் கைகூடவில்லை.

இதையும் படியுங்கள்:
டார்க் விமர்சனம்: கே. பாக்கியராஜின் மிரட்டலான நடிப்பு - படம் எப்படி இருக்கிறது?
கட்டா குஸ்தி|katta kushti 2 movie review

இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம், ஒரு திரைப்படத்தின் கதை உருவாக்கம் மற்றும் திரைக்கதை கட்டுமானம் பற்றி ஆழமான புரிதலைப் பெறுவீர்கள். இது வெறும் விமர்சனமாக இல்லாமல், சினிமா கலை குறித்த உங்கள் அறிவை மேம்படுத்தும்.

logo
Kalki Online
kalkionline.com