
‘கோ-ஆப்டெக்ஸ்’ என அனைவராலும் அறியப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935-ம் ஆண்டு நிறுவப்பட்டது. தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ், கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கடந்த 90 ஆண்டுகளாக துணிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. கோ-ஆப்டெக்ஸ் முத்திரையில் இருக்கும் பல நிறங்களைக் கொண்ட வண்ணத்துப் பூச்சி கைத்தறி ஆடைகளின் தரம் மற்றும் நியாயமான வர்த்தகத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இன்று கோ-ஆப்டெக்ஸ் நீண்ட பாரம்பரியம் கொண்ட கைத்தறி துணிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு நெசவாளர்களுக்கு நீடித்த வேலைவாய்ப்பு வழங்கும் சமூக நோக்கத்தோடும் செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசின் கைத்தறி, துணிநூல், காதி, கிராமத்தொழில் (ம) கைவினைப் பொருட்கள் துறையினால் இவ்வமைப்பு நிர்வகிக்கப்படுகிறது. இதற்குச் சொந்தமான விற்பனை மையங்கள் தமிழ்நாட்டின் பல ஊர்களில் அமைக்கப்பட்டுள்ளன.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், கோ-ஆப்டெக்ஸ் இன்டர்நேஷனல் என்ற சர்வதேச பிரிவையும் கொண்டுள்ளது, இது ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, கனடா, கிரீஸ், ஹாங்காங், இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு அதன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது.
சுத்தமான, தரமான பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றது கோ-ஆப்டெக்ஸ். அதன்படி இந்தாண்டு தீபாவளிக்கு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 200க்கு அதிகமான வெவ்வேறு டிசைன்களில் தயாரிக்கப்பட்ட பட்டு சேலைகள் மற்றும் 250 விதவிதமான டிசைன்களில் தயாரிக்கப்பட்ட கைத்தறி மற்றும் காட்டன் புடவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அத்துடன், கோ-ஆப்டெக்ஸ் புதிய ரகங்களும், சலுகைகளும் மற்றும் 30% அரசு சிறப்புத் தள்ளுபடியை வழங்குகிறது. கோவை மென்பட்டு, ஆரணி, சேலம், திருபுவனம் பட்டுப்புடவைகள், கோரா காட்டன், லினன் மற்றும் பருத்திச் சேலைகள் போன்ற பல்வேறு ரகங்களில் புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
மேலும், இங்கு போர்வைகள், படுக்கை விரிப்புகள், வேஷ்டிகள், லுங்கிகள், சட்டைகள் எனப் பலவிதமான பொருட்களும் கிடைக்கின்றன.
கோ-ஆப்டெக்ஸில் திருமணப் பட்டுப் புடவைகளில் திருமணம் செய்துகொள்பவர்களின் உருவங்கள் நெய்து தரப்படுகின்றன. மேலும் பட்டுப்புடவைகளில் பாரம்பரிய வடிவங்கள், இலக்கியக் கதாபாத்திரங்களின் உருவங்கள் போன்றவையும் வாடிக்கையாளரரின் விருப்பத்திற்கேற்றாற் போல உருவாக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.1 கோடியே 60 லட்சத்து 35 ஆயிரம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.2 கோடியே 30 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தி உள்ள மாதாந்திர சேமிப்புத் திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் 11 மாத தவணைகளாக பணம் செலுத்தி, 12-வது மாத தவணையை கோ-ஆப்டெக்ஸ் மூலம் இலவசமாக பெற்று, 30% தள்ளுபடியில் துணிகளை வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் வாங்க விரும்புபவர்கள் www.cooptex.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான ஆடையை தேர்வு செய்து கொள்ளலாம்.