

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை அவர்கள் பிடித்து விசாரித்தனர். அவரிடம் சிறிய டப்பாவில் கொடிய பாம்பின் விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுகொடிய பாம்பு விஷம் என்றும் ரகசியச் சந்தையில் பல கோடிக்கு விற்பனை ஆவதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 6.5 மில்லி லிட்டர் பாம்பு விஷத்தை கைப்பற்றினர். இதன் சந்தை மதிப்பு ரூபாய் 5.85 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பு விஷத்தை விற்க வந்தவரின் பெயர் சோனி என்றும் அவர் அதை கூடுதல் தொகைக்கு விற்க இருந்ததும் காவல் துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருடன் ரகசிய வர்த்தகத்தில் ஈடுபடும் கும்பலையும் பிடிக்க காவல்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி அவரை வாடிக்கையாளரிடம் பேச வைத்து பாம்பு விஷத்தை வாங்குபவர்களுக்கு வலைவிரித்தனர். அப்போது பாம்பு விஷத்தை ரூபாய் 8 கோடிக்கு வாங்கிக்கொள்ள சம்மதம் தெரிவித்து சிலர் வந்தனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் பாம்பு விஷம் வாங்க வந்த மேலும் 6 பேர் கைது செய்த பட்டனர். அவர்களில் 4 பேர் மத்திய பிரதேசத்தில் வதோதரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் சூரத் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. குஜராத்தில் அதிக மதிப்புள்ள பாம்பு விஷம் பிடிபடுவது இதுவே முதல் முறை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொடிய பாம்பு விஷமானது விஷ முறிவு மருந்து தயாரிப்பு மற்றும் வெறித்தன போதை விருந்துகள் உள்ளிட்ட பல ரகசியத் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.இதன் காரணமாகவே இதன் விலை பலகோடி ரூபாய்களுக்கு விற்கப்படுவதாகவும் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.