

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேலையில்லாத இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்' என்று விமர்சித்ததற்குப் பதிலடியாக, இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நையாண்டி இணைய இயக்கம் தான் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janata Party-CJP). ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) பெயரைப் போலவே நையாண்டியாக 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) எனப் பெயரிடப்பட்டது.
இது தேர்தல் ஆணையத்தால் பதிவுசெய்யப்பட்ட நிஜமான அரசியல் கட்சி அல்ல. முழுக்க, முழுக்க சமூக ஊடகங்களில் நெட்டிசன்களால் உருவாக்கப்பட்டது. உருவான ஒரு சில நாட்களில் இந்த கட்சியின் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலர் இணைந்தனர். ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சமூக ஊடகப் பிரச்சார பணியாளர் அபிஜித் தீப்கே என்பவர் தான் இந்த கட்சியை நிறுவியுள்ளார்.
'ராய்ட்டர்ஸ்', 'அல் ஜசீரா', 'ஃபோர்ப்ஸ்' போன்ற சர்வதேச ஊடகங்கள் வரை இந்த 'கரப்பான்பூச்சி புரட்சி' செய்தியாக மாறியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பலமான இளைஞர் சக்தி, தங்களின் கோபத்தை வெளிப்படுத்த "ஹைப்பர்-அயர்னிக்" என்று கூறப்படும் இதுபோன்ற மீம்ஸ் கலாசாரத்தைக் கையில் எடுத்திருப்பதை உலகிற்கு இந்த இயக்கம் உணர்த்தி இருக்கிறது.
இந்த சூழலில் இந்தியாவை போல அண்டை நாடான பாகிஸ்தானிலும் கரப்பான்பூச்சி அவாமி லீக் கட்சி உருவாகியுள்ளது. பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் பாகிஸ்தானில் இளைஞர்கள், அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்ப இதை தளமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
வேலைவாய்ப்பின்மை, ஊழல் மற்றும் அரசாங்கத்தின் மீதான இளைஞர்களின் விரக்தி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த இயக்கம், உருவான குறுகிய காலத்திலேயே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாஜகவை விட அதிகமான பின்தொடர்பாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. இன்ஸ்டாகிராமில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள்'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' பக்கம் பின்தொடர்கிறார்கள்.
கட்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதன் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது. பின்னர் மற்றொரு பக்கம் உருவாக்கப்பட்டு அதில் பலர் இணைந்து வருகின்றனர்.
இது முழுக்க முழுக்க இளைஞர்களுக்காக இளைஞர்களே உருவாக்கிய கட்சி என்றும் இதன் செயல்பாடுகள் நாட்டில் நிலவும் பிரச்சனைகளை தோலுரிப்பதே என்றும் கூறப்பட்டுள்ளது.
நையாண்டி மற்றும் கிண்டல் கலந்த அரசியல் விமர்சனங்கள் இந்த பக்கங்களில் பெரும்பாலும் பகிரப்படுகின்றன. அதே நேரம் இன்றைய இளைஞர்களின் ஆதங்க குரலாகவும் சில பதிவுகள் அதில் வருகின்றன.
இந்த விஷயத்தை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. கேலிப் பேச்சாகவும் பார்த்து இருந்துவிட முடியாது. இன்றைய தலைமுறை இளைஞர்கள் தங்களின் ஜனநாயக எதிர்ப்பு குரலை ஓங்கி ஒலிக்க நடத்தும் டிஜிட்டல் போராகவே இதனை பார்க்க முடிவதாக பலரும் தங்கள் கருத்துகளை பதிவிடுகின்றனர்.
இதற்கிடையே பீகார் மாநிலத்தின் பாங்கிபூரில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த அதன் ஆதரவாளர்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ஆதரவாளர்களின் இருப்பிடம் குறித்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கை பின்தொடர்பவர்களில் பெரும் பகுதியினர் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் துருக்கி போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று சமூக வலைதள பயனர்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் காணொளிகள் எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராமில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகளின்படி, கட்சியின் மொத்த ஆதரவாளர்களில் இந்தியர்கள் ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு எக்ஸ் பயனர், "அவர்களின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களில் 77% பேர் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் பங்களிப்பு வெறும் 9% மட்டுமே" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், "CJP-யின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களில் சுமார் 63% பேர் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். இது கவலைக்குரிய விஷயம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு இணையவாசி, ‘இந்தியாவில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷை ஆதரிப்பவர்கள் சுமார் 15% பேர் உள்ளனர்’ என்று எழுதினார்.
அதேபோல் CJP-யின் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இன்ஸ்டாகிராமில் அதிகரித்து வந்தாலும், X-ல் அதற்கு விகிதாசார அதிகரிப்பு இல்லை என்றும் பல இணையப் பயனர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கூற்றுகளுக்கு கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே மறுப்புத் தெரிவித்தார்; அதில், 94% பின்தொடர்பவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறியுள்ளார். இந்த விவாதம் இணையத்தில் வலுவான அரசியல் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.
இந்திய தேசிய காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி மற்றும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி போன்ற அரசியல் குழுக்களின் ஆதரவாளர்கள் கரப்பான்பூச் ஜனதா கட்சியை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் அல்லது கூற்றுகளை ஆதரிக்கும் எந்தவொரு சுயாதீனமான ஆதாரமும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.
மேலும், இந்தக் கணக்கின் பின்தொடர்பவர்களின் புவியியல் விவரங்கள் குறித்து மெட்டா அல்லது இன்ஸ்டாகிராம் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தரவுகளும் வெளியிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இதற்கு பலரும் ஆதரவுக்கரம் நீட்டினாலும், இதற்கு சில எதிர்ப்பு குரலும் பதிவாகத்தான் செய்கின்றன. எது எப்படி இருந்தாலும், மக்களிடையே அரசியல் விழிப்புணர்வையும், விவாதத்தையும் ஏற்படுத்த "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போன்ற இணையதள நையாண்டி இயக்கம் ஒரு வடிகாலாக மாறி இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
வெறும் இணையதள நையாண்டியாகத் தொடங்கி, தற்போது பிரதான கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரசுக்கு எதிராக தேர்தல் களத்தில் இறங்கப் போவதாகக் கூறப்படுவது, அரசியலில் இளைஞர்களுக்கு எழுந்துள்ள ஆர்வமாகவும் பார்க்கப்படுவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.