கோட் பிங்க் ப்ளான்...? அது என்ன..? எதற்காக..? எங்கே..?
அநேக அரசு மருத்துவமனைகளில், பிறந்த குழந்தை காணாமல் போய்விடுவதற்கு, கடத்தல் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இதனைத் தடுக்க 'கோட் பிங்க்' ப்ளானை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் (டி.எம்.இ.ஆர்.), மும்பையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் பின்னணி :-
சமீபத்தில், சாங்கிலி மாவட்டம் மீரஜ் பகுதியிலுள்ள அரசு மருத்துவ மனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆப்பரேசன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மூன்றாவது நாளில், கூட இருந்த உறவினர் வெளியே சென்றிருந்த சமயம், வார்டுக்குள் நுழைந்த ஒரு பெண், குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டும் என மருத்துவர் கூறியதாக குழந்தையின் தாயாரிடம் கூறி குழந்தையைத் தூக்கிச் சென்றார். வெகு நேரமாகியும், குழந்தையை அந்தப் பெண் கொண்டுவரவில்லை. பதறிப் போன குழந்தையின் தாயார், மருத்துவர்களிடம் விசாரித்துள்ளார்.
அச்சமயம், மருத்துவர்கள், தாங்கள் அந்தக் குழந்தையைக் கேட்கவில்லை என்றனர். போலீஸிடம் புகார் செய்தபின், இரண்டு நாட்களுக்குப் பிறகு குழந்தை கிடைத்தது. கடத்திச் சென்ற பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் குழந்தைக் கடத்தலைத் தடுக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும், 'கோட் பிங்க்' CODE PINK திட்டத்தை டி.எம்.இ.ஆர். அறிமுகப்படுத்தியுள்ளது.
'கோட் பிங்க்' விபரங்கள் :-
மகப்பேறு வார்டுகள் மற்றும் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு வெளியில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியாளர்களை அமர்த்துவதுதான் இதன் திட்டம். மேலும்
சி.சி. டீவி கேமராக்களைப் பொருத்துவது
அபாய எச்சரிக்கைகள் மற்றும் கட்டாய பார்வையாளர் நுழைவுப் பதிவுகள்
தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு கட்டாய அடையாள சரிபார்ப்பு
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவமனை ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பது போன்றவையாகும்.
'கோட் பிங்க்' செயல்முறை:-
முதலில், குழந்தை காணாமல் போனதை, நர்ஸ் உறுதிப் படுத்திக்கொண்டு மருத்துவர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளருக்குத் தெரிவிக்க வேண்டும். பின்னர் 'கோட் பிங்க்' அறிவிக்கப்படும்.
உடனே, மருத்துவமனை டெலிபோன் ஆபரேட்டர், அனைத்து மருத்துவர்கள், பாதுகாவலர்கள் என எல்லோருக்கும் மூன்று முறை, 'கோட் பிங்கை' அறிவிப்பார்கள்.
மருத்துவமனையின் எல்லா கதவுகளும் உடனே மூடப்பட்டுவிடும்.
சி.சி.டீவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து பாதுகாவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும். அதன்படி சந்தேகத்திற்குரிய நபர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள்.
மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மற்ற குறியீடுகள் :-
1) கோட் ப்ளூ (code Blue) :- மருத்துவ மனையில் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளி இருந்தால், 'கோட் ப்ளூ' பயன்படுத்தப்படும்.
2) கோட் ரெட் (code Red) :- மருத்துவமனையில் தீ விபத்து ஏற்படுகையில், 'கோட் ரெட்' குறியீடு உபயோகப்படுத்தப்படும்.
3) கோட் க்ரே (code Grey) :- மருத்துவமனையில் அமைதியின்மை அல்லது வன்முறை ஏற்படுகையில் 'கோட் க்ரே' பயன்படுத்தப்படும்.
4) கோட் ப்ளாக் (code Black) :- மருத்துவமனையில் வெடிகுண்டு அச்சுறுத்தல் சமயம் 'கோட் ப்ளாக்' உபயோகப்படுத்தப்படும்.