டெங்குவை ஒழிக்க போய் உயிரே போன சோகம்! கோவையில் கொசு மருந்து அடித்ததில் 2 பேர் மூச்சுத்திணறி பலி..!

வீட்டுக்குள் கொசு மருந்து அடித்ததால் கொடூரம்!: மூச்சுத்திணறல் ஏற்பட்டு 2 முதியவர்கள் பலி; கோவை அன்னூரில் மக்கள் போராட்டம்!
கொசு மருந்து
கொசு மருந்துsource:abpnadu
Updated on

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டதை தொடர்ந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு முதியவர்கள் உயிரிழந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெயில் காலம் முடிந்து மழை காலம் தொடங்கிவிட்டது கூடவே கொசுக்களின் உற்பத்தியும் அதிகரிக்க தொடங்கி விடும். கொசுக்களின் பெருக்கத்தால் நோய் பாதிப்புகளும் பரவ துவங்கும் என்பதால் இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உள்ளாட்சி நிர்வாகம் கொசு மருந்து தெளிப்பு உள்ளிட்ட துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொசு மருந்து அடிக்கும் பணி ஒவ்வொரு கழிவு நீர் கால்வாயிலும் மற்றும் நெருக்கமாக வீடுகள் உள்ள பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோவை அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் காரணமாக மூன்று குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்னூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு வந்த புகாரைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கையாக மாநகராட்சி அதிகாரிகள் களத்தில் இறங்கி அன்னூர், சத்தியமங்கலம் சாலை, உப்பு தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் கொசு மருந்து அடிக்கும் பணியை நேற்று முன்தினம் தொடங்கியுள்ளனர் .

பொதுவாக கொசு மருந்து கழிவு நீர் கால்வாய், குப்பை தொட்டி, வீட்டைச் சுற்றி மட்டுமே அடிக்கப்படுவது வழக்கம் என்றும் ஆனால் அன்னூர் பேரூராட்சி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கொசு மருந்தை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்ப்பையும் மீறி வீட்டுக்குள் அடித்த கொசு மருந்து புகையால் உப்பு தோட்டம் பகுதியில் வசித்து வரும் 65 வயதான மோகன் மற்றும் 75 வயதான பிரேமா பெண்மணியும் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அவர்கள் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே இவர்கள் நுரையீரல் பாதிப்பு காரணமாக வீட்டில் இருந்தபடி சிகிச்சை எடுத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொசு மருந்து அடித்து விட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனை சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பேரூராட்சி ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக வேதிப்பொருட்களைக் (Pyrephrum) கலந்து, அலட்சியமாக மருந்து அடித்ததே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனவும் வீடுகளுக்குள் புகுந்து கொசு மருந்து அடித்தது தவறு என்றும் அப்பகுதி மக்கள் பேரூராட்சி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது 'குடியிருப்புகளை சுற்றி 400 மீட்டர் தொலைவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதால் பணியை மேற்கொண்டதாக' தெரிவித்தார் என்றும் இதனை அப்பகுதி மக்கள் ஏற்காமல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது.

அதே சமயம் கொசு மருந்து அடிப்பதால் பொதுமக்களுக்கு எந்தவித மூச்சு திணறலும் ஏற்படாது. உயிரிழந்த மோகன் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் இரண்டு நாட்களில் உயிரிழந்து விடுவார் என தனியார் மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது. அதேபோல் ராணி என்கிற பிரேமா என்ற பெண்மணி நுரையீரல் பிரச்சனை காரணமாகவே உயிரிழந்துள்ளார். ஆனால் கொசு மருந்து அடித்ததால் தான் இறந்ததாக பொதுமக்கள் கூறி வருகின்றனர் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதா மற்றும் மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக மாநகராட்சி ஊழியர்கள் கொசு ஒழிப்புக்காக வீதிகளில் இயந்திரம் மூலம் புகையாக/ஸ்ப்ரேவாக தெளிக்கும் மருந்தில் (Pyrethroid வகை) பூச்சிக்கொல்லி வகை ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வேதிப்பொருட்களை நீண்ட நேரம் அல்லது அதிக அளவில் சுவாசிப்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

புகை மூட்டம் செய்யும்போது மருந்து மிகச் சிறிய துகள்களாக காற்றில் பரவுவதால், அந்த நேரத்தில் அருகில் நிற்பவர்கள் அதை சுவாசிக்காமல் இருப்பது நல்லது.

குறுகிய நேர வெளிப்பாடு என்றாலும் சிலருக்கு மூக்கு/தொண்டை எரிச்சல், இருமல், தலைவலி, கண் எரிச்சல், தலைச்சுற்றல் ஏற்படலாம். ஆஸ்துமா அல்லது பிற சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் புகை மற்றும் துகள்களால் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மருந்தின் நெடியால் தொடர்ந்து இருமல் அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக புதிய காற்றுள்ள இடத்திற்குச் செல்லுமாறுமீ

மூச்சு விட மிகவும் சிரமம், மார்பு இறுக்கம், மயக்கம் அல்லது தொடர்ந்து வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்த கோவை சம்பவத்திலும் ஏற்கனவே உடல் நலம் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் இருந்ததாலும், வீட்டிற்குள் சென்று கொசு மருந்து அடித்ததாலும் அவர்களின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் கொசு மருந்து தெளிக்கும் விஷயத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மக்கள் என அனைவரும் கவனமுடன் இருப்பது இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
சொத்து வரி 3 முதல் 4 மடங்கு உயர்த்தப்பட்டதா? மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
கொசு மருந்து
logo
Kalki Online
kalkionline.com