

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளை, நாளை மறுநாள் தூண்பாறை, குணாகுகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கத்துக்கு கட்டணமின்றி செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுலாப் பயணிகள் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி, கொடைக்கானலின் இந்த வனத்துறை சுற்றுலாத் தலங்களை கட்டணமின்றி கண்டு மகிழலாம்.
கோடை காலம் தொடங்கியதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் ஒரு பெரிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.அதாவது கடந்த ஜனவரி 12ஆம் தேதி முதல் ஒரு புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் ஒரே இடத்தில் QR கோடு மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கும் முறை தொடங்கப்பட்டது.
ஒரே இடத்தில் கட்டணம் வசூலிக்கும் முறை நீடிப்பதால் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் வாகனங்கள் செல்ல அதிக நேரம் ஆகிறது. சில நேரங்களில் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் மலைச்சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.
இந்த பிரச்சினையால் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல், தினசரி வேலைக்குச் செல்லும் உள்ளூர் மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலைமை காரணமாக அந்த வழியாக செல்லும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாளையும், நாளை மறுநாளும் தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள் மற்றும் மோயர் சதுக்கம் போன்ற இடங்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் ஆன்லைன் கட்டண வசூல் நடைமுறை காரணமாக தாமதம் ஏற்படுகிறது எனக் கூறி, வாடகை வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு பயணிகள் சிரமம் அடையாமல் இருக்க தற்காலிகமாக இந்த கட்டண விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.