

கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க நுங்கு பறிக்க சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள திருமாங்காடு கிராமத்தில், டெல்லி கணேஷ் மற்றும் தட்சிணாமூர்த்தி என்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் பனை மரத்தில் நுங்கு பறிக்க முயன்றனர். அந்தப் பனை மரத்திற்கு மிக அருகிலேயே உயர் அழுத்த மின்சாரப் பாதையுடன் கூடிய டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) அமைந்துள்ளது. மாணவர்கள் மரத்தில் ஏறி நுங்கு வெட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு நுங்கு குலை தவறி அருகிலிருந்த டிரான்ஸ்பார்மர் வயர்களில் சிக்கிக்கொண்டதாகத் தெரிகிறது.
அப்போது, இரும்புக் கம்பியைக் கொண்டு மின்மாற்றியில் சிக்கியிருந்த நுங்கை எடுக்க முயற்சித்தனர். இதில் எதிர்பாராத விதமாக டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் உயர் அழுத்த மின்சாரம் மாணவர்கள் மீது பாய்ந்ததில், இருவரும் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.