வியட்நாம் நாட்டை சேர்ந்தது ‘வின்பாஸ்ட்’ நிறுவனம். இந்த நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1½ லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதனை தொடர்ந்து கடந்தாண்டு இந்த தொழிற்சாலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த தொழிற்சாலை 114 ஏக்கரில் அமைக்கப்பட்டு, முதல் கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் இந்த தொழிற்சாலையில் கார் உற்பத்தி பணிகள் நிறைவடைந்த நிலையில் ‘வி.எப்-6, வி.எப்-7’ ஆகிய 2 வகை கார்களை வின்பாஸ்ட் நிறுவனம் தற்போது விற்பனைக்கு கொண்டு வர தயாராகி உள்ளது.
இதையடுத்து வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையின் திறப்பு விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து ஆலையை திறந்து வைத்து, கார் விற்பனையை தொடங்கி வைக்கிறார்.
வின்பாஸ்ட் ஆலையை தொடங்கி வைத்த பிறகு, தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
இதுவரை சென்னையில் மட்டுமே நடைபெற்று வந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழகத்தின் பிற தொழில் நகரங்களிலும் நடத்த தமிழக அரசு முடிவு செய்ததன் அடிப்படையில் சென்னைக்கு அடுத்தபடியாக நடைபெறும் முதல் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தூத்துக்குடியில் இன்று நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.32 ஆயிரத்து 554 கோடி முதலீட்டில் தொழில் தொடங்குவதற்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 49,845 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், தென்மாவட்டங்களில் தொழில் புரட்சி உதயமாக இருப்பதாகவும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதனை தொடர்ந்து இந்த விழாவில் ரூ.2,530 கோடி முதலீட்டில் 3,600 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழில் தொடங்குவதற்கு ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட 5 நிறுவனங்களின் செயல்பாட்டையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
‘தூத்துக்குடியில் சாலை போக்குவரத்து, விமான போக்குவரத்தை தவிர்த்து கூடுதலாக கப்பல் போக்குவரத்து வசதி இருப்பதால் இங்கு முதலீடு செய்வதற்கு உலகளாவிய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதாகவும், இதனால் சென்னைக்கு அடுத்தபடியாக பிற தொழில் நகரங்களில் நடத்தப்படும் தொழில் முதலீட்டாளர்களின் முதல் மாநாட்டை தூத்துக்குடியில் நடத்த திட்டமிட்டதாகவும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.