கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்ட போதிலும் முதல்வர் யார் என்பதில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆகிய இருவருமே முக்கியமான தலைவர்களாக உள்ளனர். சித்தராமையா ஏற்கெனவே முதல்வராக பதவி வகித்துள்ளார். சிவக்குமார் மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். இருவருமே முதல்வர் பதவி மீது ஆசைப்படவில்லை என்று கூறிவந்தாலும் அவர்கள் இருவருக்கும் இடையேதான் போட்டி உள்ளது தெரிகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறவும் கடுமையாக உழைத்துள்ளேன். அதற்கு தக்க பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று சிவக்குமார் கூறிவருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி பல்வேறு சோதனைகளைக் கடந்து வர காரணமாக இருந்தவர் சிவக்குமார் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும், முதல்வர் பதவி யாருக்கு கிடைக்கும் என்று கேட்டபோது, இது பற்றி கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் அதிக செல்வாக்குள்ள பணக்கார அரசியல்வாதிகளில் சிவக்குமாரும் ஒருவர். 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்ட அரசு முறிவதற்கு முன் அதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டார். ஆனால், அவை பலன் தரவில்லை.
இருதரப்பிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியதால் ஆட்சி கவிழ்ந்தது.
சித்தராமையா போல் அல்லாமல் சிவக்குமார் காங்கிரஸ் காரராகவே இருந்து வந்துள்ளார். 1989- இல் முதல் முதலாக தேர்தலில் போட்டியிட்டதிலிருந்து இன்று வரை அவர் தோல்வியையே சந்திக்கவில்லை. குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வழிதவறி சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவர்களை பத்திரமாக ஓரிடத்தில் தங்கவைத்து பாதுகாத்தவர் சிவக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கட்சிக்கு சோதனை ஏற்பட்ட போதெல்லாம் கட்சியை கட்டிக்காத்தவர்.
அதே நேரத்தில் 75 வயதான சித்தராமையா இந்த தேர்தல்தான் எனது கடைசி தேர்தல் என கூறிவருகிறார். காங்கிரஸ் வெற்றிபெற்றால் தம்மை முதல்வராக நியமிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு நீண்டநாளகவே உள்ளது. இப்போது காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளதால் அவர் முதல்வர் பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று துடிப்பதாகவே தெரிகிறது.
ஆனால், காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் அவர் ஒரு வெளியாள். வேறு கட்சியிலிருந்து வந்தவர் என்றே விமர்சித்து வருகின்றனர்.
காங்கிரஸ் இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கர்நாடக மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர். பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர் என்று சித்தராமையா கூறிவருகிறார்.
ஆனால், அவரது மகன் யதீந்திர சித்தராமையா, தந்தை எப்படியாவது முதல்வராகிவிட வேண்டும் என்று விரும்புகிறார்.
கர்நாடக மக்களின் நலனை கருத்தில் கொண்டு பா.ஜக.வை ஆட்சியதிகாரத்திலிருந்து விரட்ட நாங்கள் எதையும் செய்ய தயாராக இருக்கிறோம். என் தந்தைதான் முதல்வராக வரவேண்டும் என்று யதீந்திரா கூறிவருகிறார்.
மகன் என்ற முறையில் அவரை முதல்வர் பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதே நேரத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் கடந்த முறை அவர் நல்லாட்சி நடத்தியதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர் முதல்வராக வந்தால் பா.ஜ.க.வின் ஊழல் நிர்வாகம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு நல்லாட்சி நிர்வாகம் நடைபெறும். எனவே இந்த முறையும் அவர்தான் முதல்வராக வேண்டும் என்று யதீந்திரா தெரிவித்துள்ளார்.
இதனிடையே தேர்தலின் போது நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் சித்தராமையாவே முதல்வராக வரவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சித்தராமையா முதன் முதலாக 1983 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994 ஆம் ஆண்டு அவர், மதச்சார்பற்ற ஜனதாதளம் அரசில் துணை முதல்வராக இருந்தார். அதற்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2004 ஆம் ஆண்டில் தேவெகெளடவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் 2008 ஆம் ஆண்டு சித்தராமையா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2013 ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது அவர் முதல்வரானார்.
சித்தராமையா, சிவக்குமார் இருவரும் மாநிலத்தில் சக்திவாய்ந்த தலைவர்கள் என்பதிலும் இருவருக்குமே பலமான ஆதரவாளர்கள் உள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான் காங்கிரஸ் தேர்தலுக்கு முன்கூட்டியே முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கவில்லை. முதல்வர் பதவிக்கான கோதாவில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.