

சென்னையில் இசை விழா தொடங்கி விட்டது. மியூசிக் அகாடமி, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா, நாரதகான சபா, தியாக பிரம்ம கான சபா, கிருஷ்ண கான சபா, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், பாரதிய வித்யா பவன் போன்ற பெரும்பான்மையான சபாக்களில் இசை கச்சேரிகளும் கருத்தரங்குகளும் நடந்து வருகின்றன.
மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் மாலை 4 மணிக்கு எல்லாம் காபி டீ ஸ்னாக்ஸ்கள் நிகழ்ச்சியை பார்க்க வரும் அனைவருக்கும் இலவசமாக தரப்படுகிறது. செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பது போய் செவிக்கும் வயிற்றுக்கும் சேர்த்தே விருந்து தரப்படுகிறது. இப்படி செவிக்கு உணவுடன் வயிற்றுக்கும் உணவு கிடைத்தால் இசை ரசிகர்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்தான். தினம் காலை முதல் இரவு 8:30 மணி வரை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வார நாட்களில் மாலை கச்சேரிகளும், வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் காலை 10 மணிக்கு கச்சேரிகள் தொடங்கி மதிய உணவும் வழங்கப்படுகிறது.
மயிலாப்பூர் லஸ் ஏரியாவில் அமைந்துள்ள நாகேஸ்வரராவ் பூங்கா சுந்தரம் நிதி நிறுவனத்தால் பராமரிக்கப்படுகிறது. இங்கும் இயற்கை சூழலில் இசைக்கச்சேரிகள் நடைபெறுவதுண்டு. கார்த்திக் பைன் ஆர்ட்ஸில் சுதா ரகுநாதனின் கச்சேரியும், ராஜேஷ் வைத்தியாவின் வீணை கச்சேரியும் அமர்க்களமாக நடந்தது.
சென்னை இசை விழாக்களின் பாரம்பரியம் 1930 களில் தொடங்கியது.1940களில் கச்சேரி நடைபெறும் இடங்களில் உணவகங்களும் உருவாகத் தொடங்கின. இந்த 'சபா உணவக பாரம்பரியம்' நீண்ட ஆண்டுகளாக உள்ளது. பெரிய பெரிய சபாக்களில் உள்ள உணவகங்களில் தினமும் மதியம் 12 மணி முதல் இரண்டே முக்கால் மணி வரை தலைவாழை இலை விருந்து அளிக்கப்படுகிறது மாலை 4:30 மணி முதல் ஆறரை மணி வரை பஜ்ஜி வடைகள் ஸ்வீட் என அமர்க்களப்படுகிறது இரவு 7 மணி முதல் அடை அவியல் தோசை வகைகள் என விதவிதமான டிபன் ஐட்டங்கள் கிடைக்கின்றன அதுவும் தினம் தினம் னு மெனுக்கள் மாறிக்கொண்டே இருக்கிறது.
அறுசுவை நடராஜன் கேட்டரிங், மவுண்ட் பேட்டன் மணி ஐயர் கேட்டரிங், நம்ம வீட்டு கல்யாணம் கேட்டரர்ஸ், ஸ்ரீ ஜெய ராக வேந்திரா கேட்டரர்ஸ், சேஷா கேட்டரர்ஸ், மீனாம்பிகா கேட்டரர்ஸ், ஞானாம்பிகா கேட்டரர்ஸ், வீனஸ் கேட்டரிங் சர்வீசஸ், மைலாப்பூர் ஸ்ரீ சங்கரா கேட்டரர்ஸ், எல்.வி. பட்டப்பா கேட்டரிங், மிண்ட் பத்மநாபன் கேட்டரிங், அனு கேட்டரிங் சர்வீசஸ் சாஸ்தா கேட்டரிங், ஸ்ரீ சாஸ்தாலயா கேட்ட ரிங், ஏபிசி கேட்டரிங், சத்வா கேட்டரிங் சர்வீஸ் என பல உணவகங்கள் உள்ளன.
இசை ரசிகர்களுக்கு இசையுடன் சுவையான விருந்தும் கிடைக்கிறது. கர்நாடக இசைை, நடனம், நாடகம் மற்றும் கருத்தரங்குகள் என பல நிகழ்ச்சிகள் சபாக்களில் களைகட்ட தொடங்கிவிட்டன. வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலைஞர்கள் மற்றும் நேயர்கள் இதில் பெரும் அளவில் கலந்து கொள்கின்றனர். முன்பெல்லாம் ஒரு மாத கால கச்சேரி திருவிழாவிற்கு பயணத்திட்டம் வகுப்பது என்பது ஒரு சவாலான வேலையாக இருந்தது. ஆனால் இப்பொழுது ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் வருகையால்(generative AI) இந்த நிலை முற்றிலும் மாறி உள்ளது. சிக்கலான பணியை மிகவும் எளிதாக்கி விட்டது.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பாரம்பரிய இசை விழா அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று விட்டது. இனி பார்வையாளர்கள் கையேடுகளை புரட்டுவதற்கு பதில் டிஜிட்டல் உதவியாளரிடம் தங்கள் விருப்பங்களை சொல்லி தனக்கு பிடித்த இசை விருந்தை தங்கு தடை இன்றி ரசிக்க முடியும்.