

நாட்டில் போலி வாக்காளர்களை நீக்கும் வகையில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி முதலில் பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, லட்சக்கணக்காண வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, மத்திய பிரதேசம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் சத்தீஷ்கர் உள்ளிட்ட 9 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் வாக்காளர் படிவங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் முடிவுக்கு வந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்லல் ஆணையம் வெளியிட உள்ளது. இதன்படி தமிழகத்தில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிலும் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் நவம்பர் 4 ஆம் தேதி வாக்காளர் படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, டிசம்பர் 4 ஆம் தேதி வரை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நிர்ணயித்தது தேர்தல் ஆணையம். வாக்காளர் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்ற வந்த நிலையில், பொதுமக்களுக்கு கூடுதலாக மூன்று நாட்கள் அவகாசத்தையும் வழங்கியது தேர்தல் ஆணையம். இதன்படி 100% வாக்காளர் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் வாக்காளர் படிவங்களை இணையத்தின் பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடந்து முடிந்துள்ளன.
இந்நிலையில் எஸ்.ஐ.ஆர். பணிகளின் மூலம் தமிழ்நாட்டின் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த அக்டோபர் மாத தரவுகளின் படி தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இதில் சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டால், அது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
இதில் அதிகபட்சமாக சென்னை, திருப்பூர், கோவை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தான் அதிக அளவிலான வாக்களர்கள் நீக்கப்பட உள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் நீக்கப்பட இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு மேற்கு வங்க மாநிலத்தில் 58 லட்சம் வாக்காளர்களை நீக்கிய தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் இதைவிட கூடுதலான வாக்காளர்களை நீக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர புதுச்சேரியில் 85,531 வாக்காளர்களை நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம். புதிய வரைவு வாக்காளர் பட்டியலின் படி, தற்போது புதுச்சேரியில் 7.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
ஒருவேளை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தால், வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் இணைய விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் நான் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும். தமிழ்நாட்டில் வருகின்ற டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 15 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டைப்பதிவில் கொண்டவர்கள் உட்பட தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்களின் நீக்க உள்ளது தேர்தல் ஆணையம். இருப்பினும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானால்தான் இந்தத் தகவல் அதிகாரம் பூர்வமாக வெளியாகும்.