

தமிழக காங்கிரஸ் தலைவராக கடந்த 2024 பிப்ரவரியில் செல்வப்பெருந்தகை பதவி ஏற்றார். கிட்டத்தட்ட அவர் பதவியைற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு முடிகிறது.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற இருப்பதாக தேசிய தலைமை முடிவெடுத்துள்ளது இதன்படி அடுத்த தலைவராக விருதுநகர் எம்பி ஆன மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழ்நாட்டில் நடந்து முந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றிப்வாகை சூடியது. குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வபெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார்.
தொகுதி மக்களின் நன்மை கருதி, சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக செல்வப்பெருந்தகை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக ஜோதிமணி எம்பி அவர்கள் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்வில் பெரிய அளவில் பணம் கை மாறி இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் மீது குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமை மேலிடமும் செல்வப்பெருந்தகை மீது அதிருப்தியில் இருப்பதால், காங்கிரஸ் மாநில தலைவரை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது திமுகவுக்கு ஆதரவாகவே செல்வப்பெருந்தகை செயல்பட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வருகின்ற ஜூன் 18ஆம் தேதி செல்வப்பெருந்தகையின் மகள் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்குப்பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட அதிக வாய்ப்புள்ளது என தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அவரே விலகுவாரா அல்லது காங்கிரஸ் தலைமையே தலைவரை மாற்றுமா என என்பதே தற்போது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அடுத்த தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மாணிக்கம் தாகூர், ஜோதிமணி மற்றும் செல்வகுமார் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான மாணிக்கம் தாகூர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் செல்வப்பெருந்தகை தீவிரமாக இருந்தார். ஆனால் மாணிக்கம் தாகூர் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ராகுல் காந்தியிடம் எடுத்துரைத்தார்.
இருப்பினும் திமுக அணியுடனே கூட்டணி வைத்தது காங்கிரஸ். ஆனால் தேர்தலுக்குப் பிறகு தற்போது திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக-வுடன் இணைந்து 59 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது காங்கிரஸ்.
இது மட்டுமின்றி மாநிலங்களவை எம்பி சீட்டும் காங்கிரஸுக்கு வழங்கியது தவெக.
பொதுவாக தேசிய அந்தஸ்து பெற்ற ஒரு கட்சியின் மாநில தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். அதன்படி பார்த்தால் செல்வபெருந்தகையின் பதவிக்காலம் 2027 பிப்ரவரி உடன் முடிவடைகிறது. இதற்கு இன்னும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் இருந்தாலும், மாநிலத் தலைவரை மாற்றுவதில் தேசிய தலைமை உறுதியாக உள்ளது.
என்னதான் தலைவரை மாற்ற முயற்சி நடந்து கொண்டிருந்தாலும், தனது தலைமையில் தான் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.