

தேசிய மக்கள் கட்சித் தலைவரான கான்ராடு சங்மா மேகாலய மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார்.
கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற மேகாலய சட்டப்பேரவைத் தேர்தலில் கான்ராடு சங்மாவின் தேசிய மக்கள் கட்சி 26 இடங்களில் வென்றது. சங்மா முதல்வராக பதவியேற்றார். அவருடன் இதர அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
மேகாலயத்தில் சங்மா தலைமையிலான அமைச்சரவையில் அவரது தேசிய மக்கள் கட்சியினர் 8 பேர் பதவியேற்றனர். கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களில் 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனநாயக கட்சியினர் 2 பேரும், பா.ஜக. மற்றும் ஹெச்.எஸ்.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவரும் அமைச்சராக பதவியேற்றனர்.
மேகாலயத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. விதிகளின்படி முதல்வர் உள்பட 12 பேருக்கு மேல் யாரும் அமைச்சராக முடியாது. தேசிய மக்கள் கட்சிக்கு தற்போது 45 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.
முன்னதாக கான்ராடு சங்மா, ஆளுநர் பாகு செளஹானை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினார். அதில் ஐக்கிய ஜனநாயக கட்சி. மக்கள் ஜனநாயக முன்னணி ஆகியவை தேசிய மக்கள் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த தேர்தலில் தேசிய மக்கள் கட்சி 26 இடங்களில் வென்று அதிக இடங்களில் வென்ற தனிப்பெருங்கட்சியாக உருவானது. ஐக்கிய ஜனநாயக கட்சிக்கு 11 இடங்களும், பா.ஜ.க., ஹெ.எஸ்.பி.டி.பி. மற்றும் மக்கள் ஜனநாயக முன்னணி ஆகியவை தலா இரண்டு இடங்களையும் கைப்பற்றியிருந்தது. இவர்கள் தவிர சுயேச்சை உறுப்பினர்கள் இருவரும் சங்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக திமோதி டி. ஷிரா இடைக்கால சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு, புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
தமது தந்தை பி.ஏ.சங்மா தொடங்கிய தேசிய மக்கள் கட்சியை இப்போது கான்ராடு சங்மா வழிநடத்தி வருகிறார். 2008 ஆம் ஆண்டில் முதல் முதலாக அவர் எம்.எல்.ஏ. ஆனார். 2009 ஆம் ஆண்டு வரை அவர் நிதியமைச்சராக இருந்தார்.
2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை முகுல் சங்மா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், கான்ராடு சங்மா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 2016 ஆம் ஆண்டு தந்தை பி.ஏ.சங்மா மறைவுக்குப் பிறகு கட்சித் தலைவரானார். 2016 இல் துரா தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் அவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநில அரசிலுக்கு திரும்பினார்.