

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் என்பது முருகப்பெருமானின் முதற்படை வீடு என்ற சிறப்புக்குரியது. திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் குடவரை கோவிலாக இக்கோவில் உள்ளது. மலை மீது ஏறிச்செல்ல இரு இடங்களில் படிப்பாதை வசதிகள் உள்ளன. மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் தீபத்தூண் உள்ளிட்டவை உள்ளன. மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. இதில், நெல்லித்தோப்பு என்ற பகுதி, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுகள், மலை உச்சியில் உள்ள தர்கா, கொடிக்கம்பம் இவை அனைத்தும் தர்காவிற்கு சொந்தமானது.
மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றன. அதே நேரத்தில் இதற்கு எதிர்ப்பும் உள்ளது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் அமைந்துள்ள இடத்தில் தீபக்கொப்பரை அமைத்து தீபம் ஏற்றப்பட்டு வந்தது.
இதுமட்டுமின்றி, மீதமுள்ள மலைப் பகுதிகள் திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது. இதுகுறித்து 300-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 21 சாட்சிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு அதன் பின்னரே சுமார் 15 வழக்குகளில் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அதேசமயம், மலை அடிவாரத்தில் உள்ள முருகன் கோவிலில் இருந்து நெல்லித்தோப்பு வரை உள்ள மலைப்பாதை இரண்டு தரப்புக்கும் அதாவது, முருகன் கோவிலுக்கும், தர்காவிற்கும் பொதுவான வழி என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து நெல்லித்தோப்பில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல ஒரு பாதையும், சிக்கந்தர் தர்காவுக்கு செல்ல தனிப் பாதையும் தனித்தனியாக பிரிகின்றன.
இந்நிலையில், இந்து அமைப்பினர் தீபம் ஏற்ற வேண்டும் என உரிமை கோரும் தீபத்தூண், தர்காவில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால், அதேசமயம் தீபத்தூண்ணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றால், தர்காவிற்கு செல்லும் பாதையை மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொருபுறம் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்பினர் உரிமைக்கோரும் அது, தீபத்தூண் தான் என்பதற்கு இதுவரை எந்த சான்றுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இந்தத் தீபத்தூண்ணில் 1862 மற்றும் 1912-ம் ஆண்டுகளில் வெளிநபர் சிலர் தடைகளை மீறி விளக்கேற்ற முயற்சி செய்ததாகவும், ஆனால் அப்போதைய ஆட்சியாளர்களால் அது முறியடிக்கப்பட்டதாகவும் 1923-ம் ஆண்டு வெளியான நீதிமன்ற தீர்ப்பில், குறிப்பிடப்பட்டுள்ளது.
பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கோவில் நிர்வாக நடைமுறைப்படியும், தொன்று தொட்டு வரும் மரபின் அடிப்படையிலும் கருவறைக்கு மேலே உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீபத்தூணில்தான் ஓவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த வழக்கத்திற்கு மாறாக, தர்காவில் இருந்து சுமார் 50 மீட்டர் பக்கத்தில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் தற்போது இந்து அமைப்பின் நிலைப்பாடாக உள்ளது.
இந்நிலையில், தான் மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர், இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என கூறி மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த விவகாரத்தில் மேலும் சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலையின்மேல் தீபம் ஏற்றும் பாரம்பரியத்தை திருப்பரங்குன்றம் கோவில் தேவஸ்தானம் கடைபிடிக்க வேண்டும். இந்த ஆண்டு முதல் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஆரம்பித்த பிரச்சனை தற்போது பெரும் போராட்டத்தில் முடிந்துள்ளது.
அதுகுறித்த உண்மை என்னவென்று பார்க்கும் போது, தீபத்தூண்ணில் தான் காலம்காலமாக, பல நூற்றாண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டு வந்துள்ளது என்று கூறும் இந்து அமைப்பு அதற்கான ஆதாரத்தை தரமுடிவில்லை என்பது தான் உண்மை.
ஆனால் அதேசமயம், உச்சி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தீப மண்டபத்தில் தான் காலம்காலமாக கார்த்திகை தீபத்திற்கு தீபம் ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் நாயக்கர் கால கல்வெட்டில் உள்ளதாக கூறியுள்ள அறநிலையத்துறை அதுகுறித்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
தற்போது உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்கு சென்றுள்ள நிலையில், தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.