

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத் தூணில் தான் கார்த்திகை தீபம் பாரம்பரியமாக ஏற்றப்பட்டு வந்துள்ளது. பின்வரும் காலங்களில், மலையின் மீது தர்கா கட்டப்பட்டதில் இருந்து இந்த நடைமுறை மாறியது. இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் இங்கு தீபம் ஏற்றுவதை முற்றிலும் தடை செய்தது. அதன் பின்னர் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோயிலில் தான் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது.
நீண்ட காலமாக கோயில் சார்ந்த வழக்குகள் நீதிமன்றத்திற்கு சென்று வந்துள்ளன. பிரிட்டிஷ் காலத்தில் திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமைப் பற்றி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு மலை மேல் உள்ள தர்கா, அதற்கு செல்லும் படிக்கட்டுகள், தர்காவின் கொடி மரம், நெல்லித்தோப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய 33 சென்ட் இடங்களை தவிர, மற்ற பகுதிகள் அனைத்துமே திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமானவை என்று 1920 ஆண்டு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது.
நீண்டகாலமாக மலைமேல் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இதற்காக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஏழுமலை ராம ரவிக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின்படி "திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான மலையில் உள்ள தீபத் தூணில், கார்த்திகை தீபத் திருநாள் அன்று (டிச.3) தீபம் ஏற்ற ஏற்பாடு செய்ய, சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினேன்.
மலை உச்சியிலுள்ள, பாரம்பரியமிக்க தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சட்ட ரீதியாக தடை இல்லை. அந்த இடத்திலிருந்து தர்கா 15 மீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஆனால் , கோயில் நிர்வாகம் தீபத்தூணிற்கு பதிலாக மலையிலுள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற முடிவு செய்துள்ளது. இது சட்ட விரோதம். அதனால், தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்குமாறு" மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி முழுமையாக ஆய்வு செய்து
விசாரணை நடத்தினார். முடிவில் கோயில் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு வெளியானதும் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் மகிழ்ச்சியுடன் தீர்ப்பைக் கொண்டாடினர்.
நீதிமன்ற உத்தரவின்படி, இன்று மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மகாதீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதே நேரம் உச்சிப்பிள்ளையார் கோவிலிலும் தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யப்படுகிறது. 4.5 அடி உயரம் கொண்ட கொப்பரை, 450 லிட்டர் நெய், 300 மீட்டர் காடா துணி, 5 கிலோ சூடம் ஆகியவை மலைக்கு எடுத்து செல்லப்பட்டன.
இந்நிலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்து , இந்து அறநிலையத்துறை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இந்த மனு இன்று மாலையில் எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளதால், திருப்பரங்குன்றம் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.