
மத்திய பிரதேசம், சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் 11 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் டாக்டர்கள் பரிந்துரைத்த ‘கோல்ட்ரப்’ மற்றும் ‘நெக்ஸ்ட்ரோ டிஎஸ்’ உள்ளிட்ட இருமல் ‘சிரப்’களை குடித்ததால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த மருந்துகளில் ரசாயன வேதிப்பொருள் கலந்துள்ளது. இதில் ‘கோல்ட் ரிப்’ தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகிறது. எனவே, மறு உத்தரவு வரும் வரை இந்த மருந்து விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த மருந்துகள் மாசு கலந்த மருந்துகளா? என்பது பற்றி ஆராய மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து குழந்தைகள் குடித்ததாக கூறப்படும் இருமல் “சிரப்”களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் அதில், சிறுநீரகங்களை மாசுபடுத்தும் டை எத்தலின் கிளைக்கால், புரோப்ளின் கிளைக்கால் போன்றவை அந்த மருந்துகளில் இல்லை என கண்டறியப்பட்டது. இருந்தாலும் இதுபோன்ற இருமல் சிரப்புகள் குழந்தைகளின் மருத்துவ பயன்பாட்டுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில், குழந்தைகளுக்கு ஏற்படும் பெரும்பாலான இருமல் நோய்கள் மருந்தியல் தலையீடு இல்லாமலேயே தானாக தீரக் கூடியவை. இருமல் மற்றும் சளி மருந்துகள் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படவோ அல்லது வழங்கப்படவோ கூடாது. மேலும் இவை பொதுவாக 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு கூட பரிந்துரைக்கப்படுவதில்லை என்றும் எந்தவொரு பயன்பாடாக இருந்தாலும், கவனமாக மருத்துவ மதிப்பீட்டை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம், சிந்த்வாரா மாவட்டத்தில் 11 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தில் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் மருந்து மற்றும் மற்றொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் தெரியவந்ததையடுத்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குனர் குருபாரதி தலைமையிலான குழுவினர் குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மருந்து உற்பத்தி உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குனர் சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ள நிலையில், அதற்கான விளக்கத்திற்குப்பின் அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு மருந்தான ‘நெக்ஸ்ட்ரோ டிஎஸ்’ மருந்து தமிழகத்தில் ஏற்கெனவே விற்பனையில் இல்லை குருபாரதி தெரிவித்து உள்ளாா்.