

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய விலையிலும், புதிய உச்சத்திலும் பயணித்து வருகிறது. தங்கத்தின் மீதான நாட்டு மக்களின் முதலீடு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் தங்கம் வாங்குவது பாதுகாப்பான முதலீட்டு முறையாக மாறிவிட்டதால், அதிகமான மக்கள் தங்கம் வாங்குவதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
ராக்கெட் வேகத்தில் விலை உயர்ந்தாலும் பொருளாதாரத நிச்சயமற்ற சூழலில் நம்பகமான முதலீடாக கருதப்படுவதால் தங்கத்தின் மீதான முதலீடு மற்றும் விற்பனை குறைந்தபாடில்லாமல் நீடித்து வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் மீதான முதலீடு 20 சதவீதம் அதிகரித்து 91.6 டன்களாகவும், மதிப்பில் 74 சதவீதம் உயர்ந்து ரூ.51,080 கோடியில் இருந்து ரூ.88,970 கோடியாகவும் உயர்ந்ததாக உலக தங்க கவுன்சில் தெரிவித்தது. பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால் முதலீட்டு வாங்குதல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி விலை உயர்வை கடந்த ஓராண்டு இடைவெளியில் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்ற விவரத்தை ஒப்பிட்டு பார்க்கையில் சற்று தலைசுற்றத்தான் செய்கிறது. கடந்த ஆண்டு (2025) இதே பிப்ரவரி மாதம் 15-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7890கும், ஒரு பவுன் ரூ.63,120க்கும் விற்கப்பட்டது. கடந்த ஓராண்டில் கிராமுக்கு ரூ.6670ம், பவுனுக்கு ரூ.53,360 அதிகரித்து, நேற்று ஒரு கிராம் ரூ.14,560க்கும், ஒரு பவுன் ரூ.1,16,480க்கும் விற்பனை ஆனது.
அந்த வகையில் 2025-ம் ஆண்டு இறுதியில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சம் என்ற மைகல்லையும், ஜனவரியில் ரூ.1.30 லட்சம் என்ற மைல்கல்லையும் கடந்தன. ஜனவரி 29-ம் தேதிக்கு பிறகு தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து தற்போது வரை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
இந்நிலையில் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக இருந்த முக்கிய காரணிகள் அனைத்தும் தணிந்து விட்டதாக கூறும் சந்தை நிபுணர்கள் இனிவரும் காலங்களில் தங்கத்தின் விலை படிப்படியாக குறையும் என்றும் கூறுகின்றனர்.
இதற்கு முக்கியகாரணமாக நிபுணர்கள் கூறுவது சர்வதேச வர்த்தகத்தில் மீண்டும் அமெரிக்க டாலரை பயன்படுத்த ரஷ்யா முடிவு செய்து இருப்பதாகவும் ப்ளூம்பெர்க் செய்தி குறிப்பிடுவதால் தங்கம் விலை பெருமளவில் சரியும் என்கின்றனர். பல்வேறு நாடுகளும் சர்வதேச வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலரை பயன்படுத்துவதால் உலகிலேயே வலிமையான ஒரு நாணயமாக அமெரிக்க டாலர் திகழ்கிறது.
அதாவது அண்மையில் அமெரிக்கா தந்த அழுத்தத்தால் இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதை போன்று, ரஷ்யாவும் அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ள டாலர் அடிப்படையிலான வர்த்தகத்திற்கு மாற முடிவு செய்துள்ளதால் அமெரிக்க டாலர் வலுவடைந்து தங்கம் விலை குறையும் என்று கூறுகின்றனர்.
டாலரை வலுவிழக்க செய்ய சீனாவை பின் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கடந்தாண்டு அதிகளவு தங்கம் வாங்கிய நிலையில், தற்போது டாலரில் வர்த்தகம் செய்யும் ரஷ்யாவின் முடிவு, உலக வர்த்தகத்தையே மாற்றி அமைக்க போகிறது.
ஆனால் ரஷ்யா இது குறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்றாலும் இது நடந்தால் தங்கத்தின் விலை பெருமளவு குறையும் என்கின்றனர்.
ப்ளூம்பெர்க் நிறுவனம் ரஷ்யா அரசின் ஆவணங்களை ஆய்வு செய்து தான் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது என்பதால் ரஷ்யாவின் முடிவினை அடுத்து பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவதை குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதை குறைத்தால் தங்கத்திற்கான டிமாண்ட் குறையும் எனவே விலை குறையும் என்கின்றனர் நிபுணர்கள். ரஷ்யா மீண்டும் டாலர் அடிப்படையிலான வர்த்தகத்திற்கு மாறினால் கட்டமைப்பு ரீதியிலான ஒரு பெரிய மாற்றம் ஏற்படும். அதாவது ரஷ்யா தன்னிடம் உள்ள தங்கத்தை விற்க தொடங்கும். இதனால் தங்கத்தின் டிமாண்ட் குறைந்து சப்ளை அதிகரித்து விலை குறையும். இது நடக்கும்பட்சத்தில் இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் சரிவடையும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். மேலும்ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வந்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு சுமூகமான உறவு ஏற்படும் போது இது சாத்தியம் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் இது ஒரே நாளில் நடக்காது என்றும் அதாவது தொடர்ந்து படிப்படியாக குறைந்து இந்த நிலையை எட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறு தங்கம் விலை குறையும் பட்சத்தில் ஏழை, எளிய சாமானிய மக்களுக்கு சந்தோஷம்...கோடிக்கணக்கில் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு திண்டாட்டம்.