
உலகில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை குறையாமல் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. சில நாடுகளில் மக்கள் தொகை பெருக்கத்தின் விகிதம் முன்பை விட பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரம் சில நாடுகளில் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ற அளவில் குழந்தை பிறப்பு விகிதம் இல்லை. அந்த நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் வீழ்ச்சியில் உள்ளது. இதனால் அந்த நாடுகள் எதிர்காலத்தில் முதியவர்களை அதிகமாக கொண்டிருக்கும் சூழலில் இருக்கும்.
ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகைக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான சமநிலையைப் பராமரிக்க, பிறப்பு விகிதம் 2.1 சதவீதமாக இருக்க வேண்டும். இதன் பொருள் ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் இருக்க வேண்டும். நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்தால் எதிர்காலத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் திண்டாட வேண்டி இருக்கும். நாடு முழுக்க முதியோர்கள் இருந்தால், அவர்களை பராமரிக்க இளம் வயது நபர்கள் இல்லாமல் மோசமான சூழலுக்கு ஆளாக வேண்டி இருக்கும்.
குறைந்து வரும் மக்கள்தொகையை பற்றி பல நாடுகள் கவலை கொண்டுள்ளன. குறைந்த பிறப்பு விகிதம் காரணமாக, இந்த நாடுகளில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது மோசமான சுகாதார நிலையில் உதவிக்கு ஆட்கள் கிடைக்காத சூழலையும், பொருளாதாரத்தில் தேக்க நிலையையும் ஏற்படுத்தும். சில நாடுகளில் பிறப்பு விகிதம் உலகின் பிற பகுதிகளை விட மிகவும் குறைவாக உள்ளது.
தென் கொரியா நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், அந்த நாட்டில் முதியோர் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த குழந்தை பிறப்பு விகிதத்தைக் தென் கொரியா கொண்டுள்ளது, மேலும் 2022 ஆண்டில் 0.78% ஆக இருந்த பிறப்பு விகிதம் 0.72% ஆகக் குறைந்துள்ளது. புதிய ஆய்வின் படி, இந்தப் பிறப்பு விகிதம் மேலும் 0.65% ஆகக் குறையும்.
பொதுவாக கொரியாவில் இப்படி இருக்கிறது என்றால் அதன் தலைநகர் சியோலில் நிலை இன்னும் மோசமாக உள்ளது. இங்கு பிறப்பு விகிதம் 0.55% மட்டுமே. பிறப்பு விகிதம் குறைவதற்கு மிகப்பெரிய காரணம் அந்த நாட்டு இளைஞர்கள் மற்றும் யுவதிகள் திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இருப்பது, உறவுகள் மீதும் குழந்தைகள் மீதும் பிடிப்பு இல்லாமல் நாகரீகமான சமுதாயமாக தங்களை கற்பனை செய்துக் கொண்டு, பந்தங்களில் இருந்து விலகி விடுகின்றனர்.
தென் கொரிய அரசு பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அரசாங்கம் இளைஞர்களுக்கு திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளைப் பெறவும் பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் இங்கு பிறப்பு விகிதம் குறைந்து வருவதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
தென் கொரியாவைப் போலவே சீனாவிலும் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. சீனாவில் ஒரு குழந்தை சட்டம் பல வருடங்களாக அமலில் உள்ளதால், அங்கு இளைஞர்களின் எண்ணிக்கையில் சரிவு உள்ளது. மேலும் சீனாவின் கிராமப்புறங்களில் வறுமையின் காரணமாக பலரும் திருமணத்தில் இணைய பயம் கொண்டு தவிர்த்து வருகின்றனர். நகர்புற மக்கள் தங்களது பொருளாதார சவால்களுக்கு மத்தியில் குழந்தை பிறப்பு அதிக சுமையை தரும் என்று, காலம் கடத்துகின்றனர். இதனால் சீனாவில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து விட்டது.
இந்த காரணத்தினால் சீனாவின் மக்கள் தொகையில் தேக்கம் ஏற்பட்டு இரண்டாம் இடத்திற்கு சென்று விட்டது. 2022 ஆம் ஆண்டில் பிறப்பு விகிதம் சீனாவில் 1.28% குறைந்துள்ளது. இதனால் சீனாவில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வேலை வாய்ப்புக்கு இளைஞர்கள் கிடைக்காமல் வெளிநாட்டில் இருந்து ஆட்களை இறக்குகிறது.