
மக்கள் தொகை பெருக்கம் சில நாடுகளில் குறைந்தும் சில நாடுகளில் கூடியும் வருவதற்கான காரணம் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்:
மக்கள் தொகை பெருக்கம் பற்றி கூறும்பொழுது பொருளியல் வல்லுநரான திரு. ராபர்ட் மால்தூஸ், ‘இயற்கை ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையிலான விருந்தினர்களுக்கு மட்டுமே உணவளிக்க முடியும். அந்தக் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் வருவோர் பட்டினி கிடப்பர். மக்கள் தொகை வளர்ச்சியை மனிதன் தானே முன்வந்து தடுக்கத் தவறினால் இயற்கை அதுவாகவே தன் சமன்பாட்டை பழைய நிலைக்குக் கொண்டுவரும்’ என்றும் கூறினார்.
மால்தூஸின் கருத்துப்படி பூமியில் உள்ள அளவோடு கூடிய தீர்ந்து போகும் வளங்களைக்கொண்டு மக்கள் தொகையைக் கணக்கில் அடங்காமல் அதிகப்படுத்த முடியாது என்பது புலனாகிறது.
நிறைய நாடுகளில் மக்கள் தொகை பெருக்கத்தால் அவர்களுக்கு உணவளிக்க முடியாமல் பட்டினி சாவுகளும். பொருளாதார நெருக்கடியால் சுகாதார வசதிகள் செய்துகொள்ள முடியாமலும், சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியாமலும், மக்கள் பலவித நோய்களால் மடிகின்றனர். சுனாமி, கொரோனா போன்ற இயற்கை பேரழிவுகள் சுற்றுச்சூழல் பேணப்படாமையின் விளைவுதான் என்று பலரை எண்ண வைத்துள்ளது.
நமது நாட்டின் மக்கள் தொகை ஆண்டொன்றுக்கு 1.9 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் 21ஆம் நூற்றாண்டிலும் தொடரும். வளரும் நாடுகளில் மக்கள் தொகை அதிகரிக்கும்.
வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகை குறைந்து இருக்கும். 2025இல் உலக மக்கள் தொகை 7,810 மில்லியன் ஆகவும், அதுவே 2050இல் 9039 மில்லியன் ஆகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் 2025-ல் மக்கள் தொகை 13 சதவிகிதம் - 16 சதவிகிதத்திலிருந்து 2050-ல் 20 விழுக்காடு ஆகும்.
இதே காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் 12 விழுக்காட்டில் இருந்து ஏழு விழுக்காடாக குறையும் என்கிறது புள்ளி விவரம். வளரும் நாடுகள் இடையேயும் ஒரே மாதிரியாக இல்லை.
இந்தியாவில் தற்போதைய மக்கள் தொகை 102.7 கோடி. இதன் ஆண்டு சராசரி 2.1 சதவீதம்.
சீனாவின் 110 கோடி மக்கள்தொகை பெருக்கம் 1.4 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் மக்கள் தொகை பெருக்கம் 3.1 சதவிகிதம் ஸ்ரீலங்காவில் 1.4 சதவிகிதம்.
வளரும் நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிப்பதற்கு காரணம் இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு பசுமை புரட்சியால் ஏற்பட்ட உணவு உற்பத்தியும், அரசுகள் மேற்கொண்ட பொதுநல திட்டங்களும் மனித வாழ்நாளை நீட்டிக்கவும், சிசுக்களின் இறப்புவிகிதத்தைக் குறைக்கவும் உதவியது .
வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் குடும்ப கட்டுப்பாட்டு முறையை தீவிரமாகக் கடைபிடித்தமையால் அங்கு மக்கள் தொகை பெருக்கம் குறைந்ததோடு பொருளாதார ரீதியாக முன்னேறியும், தனிமனித வாழ்வு சிறந்தும் விளங்குகிறது.
சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு மக்கள் தொகை பெருக்கம் முக்கிய காரணமாக உள்ளது. கிராமத்து மக்கள் வேலை தேடி நகரங்களுக்கு செல்வதால் நகர்மயமாதலும், நகரங்களில் குடிசைகள் தோன்றுவதும் சாதாரணமாகிவிட்டது.
வளரும் நாடுகளில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் மாசுபட்டு விட்டதால், நீர் மாசுவால் உண்டான வியாதிகளால் 12 மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மடிந்து கொண்டுவரும் நிலையில் 2025-ல் 48 நாடுகள் தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை வர இருக்கிறது.
1970களில் ஏற்பட்ட பசுமைப் புரட்சி நிலங்களை வளமிழக்க செய்துவிட்டது. எனவே, காடழித்து பயிர் செய்வதாலும், நிலங்கள் பாலைவனம் ஆவதாலும், மண்ணரிப்பு ஏற்படுகிறது. மாசடைந்த நிலையில் உள்ள காற்று மேலும் மாசடைய மக்கள் தொகை பெருக்கம் வழிவகுக்கும்.
தேவைகள் அதிகரிக்கும்பொழுது நுகர்பொருட்கள் அதிகரிக்கும். நுகர்பொருட்கள் அதிகரிப்பால் கழிவுகள் அதிகரிக்கும். நீர், நிலம், காற்று, ஆகாயம் போன்றவற்றை கழிவுகள் மாசுபடுத்துகின்றன.
எனவே, மக்கள் தொகை பெருக்கம் நம் கல்வி, பொருளாதாரம், சமத்துவம், உடல் நலம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் சீரழிக்கும் ஒரு சூழல் நிலவுகிறது. இந்தச் சமூக சூழலைச் சாய்க்க தோன்றிய திட்டம்தான் குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் என்பது. இதனால் மக்கள் தொகை பெருக்கம் கணிசமாக குறைந்துள்ளது என்பது உறுதி.