மீண்டும் களைகட்டிய குற்றால சீசன்: ஆர்ப்பரித்து கொட்டும் நீர்!

ஒரு வாரமாக ஏமாற்றம் அளித்த குற்றால சீசன், நேற்றைய மழையால் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் வியாபாரிகள் மற்றும் பயணிகள் மகிழ்ச்சி.
Kutralam Falls Season
Kutralam Falls Season
Updated on

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் ஆண்டுதோறும் சீசன் களைக்கட்டும். அப்போது இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே பெய்ததின் காரணமாக அனைத்து அருவிகளையும் நீர்வரத்து துவங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பாக எல்லா அருவிகளிலும் நீர்கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்திருந்தனர்.

இந்த சூழலில் நேற்று நள்ளிரவு முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழை காரணமாக மீண்டும் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மீண்டும் களைகட்டியது சீசன். இதமான குளிர்ந்த காற்றுடன் கூடிய சீசன் நிலவுவதால், வார இறுதியை ஒட்டி குவிந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளியல் மேற்கொள்கின்றனர். இதனால் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இங்குள்ள வியாபாரிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, அவ்வப்பொழுது சாரல் மழை பெய்து வருவதால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வார இறுதி விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குற்றாலத்தில் குவிக்கின்றனர். இதனால் குற்றாலம் மீண்டும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் களை கட்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் தொடர் சாரல் மழை மற்றும் இதமான குளிர்ந்த காற்று காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த பசுமையான காடுகளும், கண்ணுக்கு விருந்தளிக்கும் கானகப் பறவைகளும், பயத்தை உண்டாக்கும் காட்டு விலங்குகளும் மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான அரிய வகை மூலிகைகளும் நிரம்பிய இடம் தான் இந்த குற்றாலம். அகத்திய முனிவர் வாழ்ந்த இந்த மலையானது ஏழைகளின் சொர்க்கபுரியாகத் திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக பல அரிய வகை மூலிகைகள் இந்தப் பகுதியில் மட்டுமே வளர்கின்றன. எங்கும் பசுமை நிறைந்த, மூலிகை காடுகள் வழியாக ஓடிவரும் நீரில் குளிக்க மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

Kuttralam Main Waterfall
Kuttralam Main WaterfallImg credit: Thina boomi

குற்றாலத்தின் 9 அருவிகள்:

  1. பேரருவி (Main Falls)

  2. சிற்றருவி (Chitraruvi)

  3. செண்பகாதேவி அருவி

  4. தேனருவி (Thenaruvi)

  5. ஐந்தருவி (Aintharuvi)

  6. பழத்தோட்டம் அருவி (ஐந்தருவிக்கு மேலே உள்ளது)

  7. பழைய குற்றாலம் அருவி

  8. புலி அருவி (Puliaruvi)

  9. அரசு தோட்டக்கலை பூங்கா சிறிய அருவி (ஐந்து அருவிக்கு மேலே உள்ளது - இது பொதுமக்களின் பார்வைக்கு அனுமதி இல்லை).

அருகில் உள்ள பிற பொழுதுபோக்கு இடங்கள்:

  • தெற்குமலை எஸ்டேட்: தேனருவியிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் இதை அடையலாம்.

  • படகு சவாரி: ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிக்கு அருகில் அமைந்துள்ளது.

  • பாம்பு மற்றும் மீன் பண்ணை: பேரருவிக்கு அருகில் அமைந்துள்ளது.

  • சிறுவர் பூங்காக்கள்: குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்காக்கள் இப்பகுதியில் உள்ளன.

குற்றாலம் அருவிகள் சார்ந்த இடம் மட்டும் அல்ல, தெய்வீகமான இடமும் கூட. சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்ரா சபை, இங்கு தான் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் பல இங்கு உள்ளது.

chitraruvi
chitraruviImg credit: AI Image

அருகில் உள்ள புகழ்பெற்ற கோயில்கள்:

  1. திருக்குற்றாலநாதர் கோயில் (பேரருவி அருகில் உள்ளது. சித்திரை மாத பௌர்ணமியின் போது இங்கு 10 நாட்கள் சிறப்புத் திருவிழா நடைபெறும்).

  2. திருமலைக்கோயில் (பண்பொழி): குற்றாலத்திலிருந்து 8 கி.மீ.

  3. குமரன்கோவில் (இலஞ்சி): குற்றாலத்திலிருந்து 1 கி.மீ.

  4. காசி விசுவநாதர் கோயில் (தென்காசி): குற்றாலத்திலிருந்து 6 கி.மீ.

  5. தட்சிணாமூர்த்தி கோயில் (புளியரை): குற்றாலத்திலிருந்து 12 கி.மீ.

  6. உலகாம்பிகை உடனுறை பாபநாசநாதர் கோயில் (பாபநாசம்): குற்றாலத்திலிருந்து 35 கி.மீ.

  7. ஐயப்பன்கோவில் (ஆரியங்காவு): குற்றாலத்திலிருந்து 35 கி.மீ.

அருகில் உள்ள மற்ற சுற்றுலாத் தலங்கள்:

1) பாலருவி – கேரளாவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி.

2) பாபநாசத்தில் உள்ள பாபநாசம் ஆறு, குற்றாலத்திலிருந்து இருந்து 35 கிமீ.

3) அகஸ்தியர் அருவி – பாபநாசம் அருகே உள்ளது.

4) பாணத்தீர்த்தம் அருவி – பாபநாசம் அருகே உள்ளது.

5) பாபநாசம் (லோயர்) அணை – பாபநாசம் அருகே உள்ளது.

6) பாபநாசம் (உயர்), காரையார் அணை – பாபநாசம் அருகே உள்ளது.

7) சேர்வலார் அணை – பாபநாசம் அருகே உள்ளது.

8)மணிமுத்தாறு அணை – பாபநாசம் அருகே உள்ளது.

9) களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் – பாபநாசம் அருகே உள்ளது.

10) மஞ்சோலை எஸ்டேட், மணிமுத்தாறு எஸ்டேட் & ஊத்து எஸ்டேட் – பாபநாசம் அருகே உள்ளது. இவ்வனைத்தும் 2300 முதல் 4200 அடி வரை அமைந்துள்ளன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு உற்சாகத்தையும் புத்துணர்வையும் தரும் இந்த ரம்யமான சூழலை அனுபவிக்கக் குற்றாலத்தில் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
தென்னிந்தியாவின் ஸ்பா: குற்றால சீசன் 2026 - ரெடி ஆகிக்கோங்க மக்களே!
Kutralam Falls Season
logo
Kalki Online
kalkionline.com