

அன்றாட சமையலில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வரும் சீரகம், மூலிகை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலான உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது சீரகத்திலும் கலப்படம் செய்திருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சள் தூளில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான செய்தி வெளிவந்தது. இநநிலையில் தற்போது சீரகத்திலும் கலப்படம் செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் இது தொடர்பாக நடந்த ஆய்வில், தற்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீரகம் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிரபல தனியார் நிறுவனம் வழங்கிய புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல பிராண்டு நிறுவனத்தின் பெயரில் போலி சீரகம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நிறுவனத்தின் உரிமையாளர் உணவு பாதுகாப்புத் துறையில் புகார் அளித்தார்.
இதன்படி சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத் துறையினர், சுமார் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி சீரக மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் ஆய்வின் போது போலி சீரகங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சீரக விதைகளில் சிமெண்ட் மற்றும் ரசாயனங்களை கலந்து, போலி சீரகங்கள் தயாரிக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். போலி சீரக தயாரிப்பு விவகாரத்தில் மகாராஷ்டிராவில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புல் விதைகளை எடுத்து அதில் கரித்தூளைப் பூசி சாதாரண சீரகத்துடன் கலந்து விடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் தாங்கள் வாங்கும் சீரகம் போலியானதா அல்லது தரமானதா என்பதை வீட்டிலேயே மிக எளிமையாக கண்டுபிடிக்கலாம் எனவும் அதிகாரிகள் அறிவுரைத்துள்ளனர்.
கலப்பட சீரகத்தை கண்டறியும் எளிய வழிமுறை:
1. சிறிதளவு சீரகத்தை எடுத்து, அதனை உள்ளங்கையில் வைத்து மற்றொரு கையால் நன்றாக தேய்க்க வேண்டும். அப்போது உங்கள் உள்ளங்கை கருப்பாக மாறினால் சீரகத்தில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
2. சிறிதளவு சீரகத்தை தண்ணீரில் சில நிமிடங்கள் ஊற வைத்தால், தண்ணீரின் நிறம் கருப்பாக மாறினாலும் அதுவும் போலியான சீரகம் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
புகார் அளிக்க:
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கலப்பட சீரகத்தின் புகைப்படம், வீடியோ மற்றும் நீங்கள் வாங்கிய கடை முகவரியுடன் புகார் அளிக்கலாம்.