சாகும் வரை உண்ணாவிரதம்: தருமபுரம் ஆதீனம் திடீர் அறிவிப்பு!

சாகும் வரை உண்ணாவிரதம்: தருமபுரம் ஆதீனம் திடீர் அறிவிப்பு!

யிலாடுதுறையில் மயூரநாதர் வடக்கு வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இலவச மகப்பேறு மருத்துவமனை இயங்கி வந்தது. 1943ம் ஆண்டு தருமபுரம் ஆதீனத்தின் 24வது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், பிரசவத்தில் இறந்துபோன தனது தாயாரின் நினைவாக ஆதீனத்துக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் இந்த இலவச மகப்பேறு மருத்துவமனையைக் கட்டினார். அப்போதைய ஆங்கிலேய கவர்னர் சர்.ஆதர் ஜேம்ஸ் ஹோப் என்பவர் இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். எட்டு ஆண்டுகள் கழித்து 1951ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் குமாரசாமி ராஜா இந்த மருத்துவமனையை திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து வந்த காலங்களில் தருமபுரம் மடத்தின் சார்பில் இந்த மருத்துவமனை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நன்கு இயங்கி வந்த இந்த மருத்துவமனை, தற்போது நகராட்சியின் பராமரிப்பின்மை காரணமாக செயல்பாடற்றுப் பாழடைந்து போயுள்ளதாக மயிலாடுதுறை மக்கள் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்து வந்தனர். அதையடுத்து, இந்த மருத்துவமனை இயங்கி வந்த இடத்தை மீண்டும் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும், மறுபடியும் அங்கே பொதுமக்கள் நலன் கருதி இலவச மருத்துவமனை அமைக்கப்போவதாக, தற்போதைய தருமபுரம் ஆதீனத்தின் 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா சுவாமிகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அரசு தரப்பில் இந்தக் கோரிக்கைக்கு எந்தவித பதிலும் வராத நிலையில், தற்போது அந்த மருத்துவமனையை இடித்துவிட்டு, அங்கே குப்பைக் கிடங்கு அமைக்கப் போவதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்திகள் வெளியானது. இதற்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இதுகுறித்து சமூக வலைதளங்களில் தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், ‘இலவச மருத்துவமனையை இடிக்கப்போவதாக செய்தி வந்துள்ளது. அப்படி ஒரு நிகழ்வு ஏற்படுமாயின், நமது முன்னோர்கள் அமைத்த நினைவு அமைப்பினை காக்க சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்’ என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானத்தின் இந்த திடீர் அறிவிப்பு பலரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com