பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல தாதா தாவூத் இப்ராஹிம் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1993 மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமாக இருந்தவர் பாகிஸ்தானைச் சேர்ந்த தாவூத் இப்ராகிம். இவரை இந்தியா உள்பட பல சர்வதேச நாடுகள் பயங்கரவாதியாக அறிவித்து தேடி வந்தனர். இவரை பிடித்து தருபவர்களுக்கு சன்மானமாக ரூ.25 லட்சமும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் கராச்சியில் பதுங்கியிருந்த தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது. அடையாளம் தெரியாத நபர் விஷம் வைத்ததில் உடல்நிலை மோசமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு சமூக வலைதளங்களிலேயே செய்திகள் வேகமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக பாகிஸ்தானில் இணைய சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியே தெரியாமல் இருக்க பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாவூத் இப்ராஹிம் உயிரிழந்துவிட்டதாகவும் இணையத்தில் தகவல் வேகமாக பரவி வருகிறது.
பாகிஸ்தானில் பல இடங்களில் இணைய வேகம் முற்றிலும் குறைந்துவிட்டது. ஒரு சில இடங்களில் முற்றிலும் முடக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் தொலைதொடர்பு ஆணையம் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. இணையத்தில் பரவும் தகவல்களின்படி, அவர் நேற்று இரவு 8 மணிக்கே உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதை பல நாடுகள் சுட்டிக்காட்டினாலும் அதை பாகிஸ்தான் மறுத்து வந்தது. ஆனால் இப்போது அவர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டுவிட்டார் என்ற தகவல்கள் வெளிவந்து, இத்தனை காலம் அவர் அங்கு தான் மறைந்து வசித்து வந்தார் என்பதை உறுதி செய்வதாக இருக்கிறது. இதனால் பாகிஸ்தானில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் அவர் இறந்தது உண்மையா? பொய்யா? என்று உறுதிப்படுத்தும் விதமாக எந்தத் தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.