

தமிழகச் சட்டமன்ற தேர்தல் களத்தில் திமுக–காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்ட போதிலும் தொகுதி பங்கீடு எண்ணிக்கையை இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு வருவதும் அதற்கு திமுக பதிலளிக்க மறுத்து வருவதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக உள்ளது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்பதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதில் காங்கிரஸ் இப்போது கவனம் செலுத்தி வருதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் கூடுதல் தொகுதிகளில் ஒதுக்க கோருவது குறித்த பேச்சுவார்த்தை 27ம் தேதிக்கு பிறகு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை திமுக தலைமையிலான குழு மூலம் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் நடத்த உள்ளது.அதன் முதல் சுற்று 27 பிப்ரவரி அன்று நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விடாப்படியான கருத்தை வலியுறுத்தி வந்த தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சம்மதிக்காததால் அவருக்கு பதிலாக காங்கிரஸ் தலைமை பொதுச்செயலாளர் கே சி வேணுகோபாலை தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு அனுப்பியது.கடந்த ஞாயிறு அன்று அவர் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து சி.ஐ.டி காலனியில் கனிமொழி எம்பி மற்றும் கிரிஷ் சோடங்கர் இடையே நடந்த ஆலோசனையில், காங்கிரசுக்கு 21 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கடந்த முறை 21 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை 41 தொகுதிகளைக் காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
இதற்கு திமுக மறுத்து வருகிறது காரணம் தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக மநீம கட்சிகளும் இணைந்துள்ளதால் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் போட்டியிடும் தொகுதிகள் குறையும் என திமுக அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது. குறைந்த பட்சம் 4 தொகுதிகள் மட்டும் மேலும் ஒதுக்கப்பட்டு காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
"பிப்ரவரி 27-ம் தேதியே தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படும்" என்று நிச்சயமாகக் கூற முடியாது. ஆனால், அன்றைய தினம்தான் முதல் கட்டப் பேச்சுவார்த்தை முறையாகத் தொடங்குகிறது. தொகுதிப் பங்கீட்டில் நிலவும் இந்த இழுபறி சுமுகமாக முடிந்து, இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.