அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் 120 பேர் இந்த வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், குறிப்பாக கெர் கவுண்டி பகுதியில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் திடீர் வெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 120-ஐ தாண்டியுள்ள நிலையில், 160-க்கும் மேற்பட்டோரை் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) தொடங்கிய இந்த வெள்ளம், மிக கனமழையால் உருவானது. குறிப்பாக, ஒரே நாளில் 20 அங்குலத்திற்கும் அதிகமான மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெறும் 45 நிமிடங்களுக்குள் ஆற்று நீர்மட்டம் சுமார் 26 அடி உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் வீடுகளும், வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன.
கெர் கவுண்டிதான் வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் சுமார் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில், கோடைக்கால கேம்பான 'கேம்ப் மிஸ்டிக்' கில் தங்கியிருந்த 27 குழந்தைகள் மற்றும் ஊழியர்களும் அடங்குவர்.
இதனால் அப்பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
வெள்ளத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து 7-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மீட்புப் படையினரும், தன்னார்வலர்களும் இணைந்து சேதமடைந்த பகுதிகள் மற்றும் குவாடலூப் ஆற்றின் கரையோரங்களில் சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர்.
இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பல நாட்கள் ஆகியும் உயிருடன் யாரையும் கண்டறிய முடியாதது, காணாமல் போனவர்களின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெக்ஸாஸ் கவர்னர் கிரெக் அபோட், இந்த வெள்ளத்தை ஒரு பெரிய பேரிடராக அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவுகளைத் தடுக்க, மேம்படுத்தப்பட்ட வெள்ள எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் அவசரகால தகவல் தொடர்பு வலைப்பின்னல்களுக்கு மாநில சட்டமன்றம் நிதி ஒதுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். வெள்ளம் குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுக்கப்படவில்லையா என்பது குறித்து அதிகாரிகள் மீது கேள்விகள் எழுந்துள்ள நிலையில், முழுமையான விசாரணை நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சீரமைப்புக்கும், மீண்டு வருவதற்கும் நீண்ட காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.