தென்கொரியாவில் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டதில் 16 பேர் பலியானதுடன், 19 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
காட்டுத் தீ என்பது மிகவும் வேகமாக பரவி பெரும் அளவில் சேதத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். சமீபத்தில் காலிஃபோர்னியா காட்டுத்தீ பற்றிதான் உலகமே பேசியது. ஒரு ஊரையே காவு வாங்கியது. பணக்காரர்கள், சாதாரண மனிதர்கள் வரை அனைவரின் வீடுகளும் தீக்கிரையாகின.
பின் ஜப்பானில் பெரிய அளவு காட்டுத்தீ ஏற்பட்டது, சுமார் 10 நாட்கள் வரை தீயை அணைக்கப் போராடினர். இது 1992ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீக்குப் பிறகு ஆக மோசமான தீ இது என்று கூறப்பட்டது.
அதேபோல்தான் தற்போது தென்கொரியாவில் காட்டுத்தீ ஏற்பட்டிருக்கிறது.
சியோல் மற்றும் தென்கொரியாவின் தெற்கு பகுதிகளிலும் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க சுமார் 9,000 தீயணைப்பு வீரர்கள், 130க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அன்டோங் நகரம் மற்றும் பிற தென் கிழக்கு நகரங்களில் உள்ள பொதுமக்கள் வெளியேறவும் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த திடீர் காட்டுத்தீயால், 43, 000 ஏக்கருக்கு அதிகமான வனப்பகுதியும் 1300 ஆண்டுகள் பழமையான புத்த கோவிலும் , நூற்றுக்கணக்கான கட்டடங்களும் தீக்கிரையாகின.
உய்சோங் நகரத்துக்கு அருகில் சியோங்சாங் கவுன்டியில் உள்ள ஒரு சிறைச் சாலையிலிருந்து சுமார் 2,600 கைதிகளை இடமாற்றம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த காட்டுத்தீக்கு மனித தவறுகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கல்லறைகளை தூய்மை செய்யும்போது புல்லை அகற்றி அதற்கு தீ வைத்து இருக்கலாம். அப்படி இல்லையெனில், வெல்டிங் செய்யும்போது தீப்பொறி பட்டு தீ பரவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இ ந்த காட்டுத்தீயில் 16 பேர் உயிரிழந்ததாகவும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காட்டுத்தீயை இன்னும் கட்டுக்குள் கொண்டுவரவில்லை என்பதால், பதற்றம் நீடித்து வருகிறது.