மலேசியாவில் மிக அதிக கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு சிலர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் அந்த பகுதிகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த மாதங்களில் உலகம் முழுவதும் பல இடங்களில் அதிகளவு மழை பெய்யும். இந்தியாவில் கூட பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் லா நீனா நிகழ்வு காரணமாக இந்த ஆண்டு இந்தியா உட்பட சில நாடுகளில் அதிகளவு குளிர் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
அந்தவகையில் இப்போது மலேசியாவிலும் கனமழை பெய்து வருகிறது. எப்போதும் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் மலேசியாவில் இதுபோன்ற வெள்ளம் ஏற்படுமாம். குறிப்பாக அக்டோபர் முதல் மார்ச் வரை பருவமழைக் காலத்தின்போது மலேசியத் தீபகற்பத்தின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வெள்ளம் வழக்கமாக ஏற்படுவதுண்டு. ஆனால், இந்தமுறை அதைவிடவும் அதிகமான மழை பதிவானதால் மக்கள் பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி இந்த வெள்ளத்தால் சுமார் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 80,589 பேர் தற்காலிகத் தங்குமிடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக தேசிய பேரிடர் நிலையத்தின் இணையத்தளம் தெரிவித்தது. பலியானவர்கள் குறித்தான எந்தவொரு தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
மலேசியாவில் கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை மலேசியாவில் 2014ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளமே மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அதைவிட கோரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக துணைப் பிரதமரும் தேசிய பேரிடர் நிர்வாகக் குழுவின் தலைவருமான அகமது ஸாஹிட் ஹமிடும் கூறினார்.
இந்த வெள்ளம் காரணமாக சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது கிழக்குக் கடலோரப் பகுதிகளில் ஒன்பது ரயில் பயணங்களை ரத்துசெய்துள்ளதாக தேசிய ரயில்வே நிறுவனமான ‘கேடிஎம் பெர்ஹட்’ ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.
மேலும் பல பாதுகாப்பு பணிகளை அரசு செய்து வருகிறது. மீட்புப் படகுகள், நான்கு சக்கர வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றோடு, 82,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளையும் பணியில் அமர்த்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.