தமிழ்நாட்டில் உள்ள உலகின் இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் இன்னும் சில ஆண்டுகளில் கடலில் மூழ்கி விடும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் பிச்சாவரம் அலையாத்தி சதுப்பு நில வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியே உலகின் இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நிலமாகும். இரண்டு முக்கிய நதிகளின் முகத்துவாரமான வடக்கில் வெள்ளாறு சரணாலயத்திற்கும், தெற்கில் கொள்ளிட ஆறு ஓரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 3000 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்தச் சதுப்பு நிலம் ஒரு சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது. அதாவது இழு படகு, படகு சவாரி போன்ற ஏராளமான நீர் விளையாட்டுகளை சுற்றுலா பயணிகள் இங்கு விளையாடுவார்கள்.
இந்த பகுதியின் காட்சிகள் மிக மிக அழகாக இருக்கும் என்பதால், பல திரைப்படங்களில் கூட காணமுடியும். பிச்சாவரம் அலையாத்தி காடுகள் 413 ஹெக்டர் அளவில் உள்ளது.
இந்த அலையாத்தி காடுகள் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியிலும் உள்ளன. இங்கு 2382 ஹெக்டர் பரப்பளவில் இது அமைந்துள்ளன. இங்கு கடல் மட்டம் உயர்வு காரணமாக வரும் 2100ம் ஆண்டில் முத்துப்பேட்டை அலையாத்தி காடு மற்றும் பிச்சாவரம் காடு ஆகியவை காணாமல் போகக்கூட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தக் காடுகள் கடலில் மூழ்குவதால் காட்டுப்பகுதியில் இருக்கும் அதிகப்படியான கார்பன்கள் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது சுமார் 2.24 டிராகிராம் கார்பன் வெளியாகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், கடலில் வாழும் மீன்கள் உட்பட பல உயிரினங்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அலையாத்தி காடுகள் என்றால் நிலமும் மண்ணும் சேரும் இடங்களில் உருவாகும் ஒரு சேற்று பகுதி ஆகும். இந்த அலையாத்தி காடுகள் அலைகளின் வேகத்தை கட்டுப்படுத்தி நிலத்தை காக்கும். மேலும் இந்தக் காடுகள் புயல், சுனாமி, சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களின் போது கடற்கரையோர குடியிருப்புகளை காப்பதிலும், மண்ணரிப்பு ஏற்படாமல் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.