இஸ்ரேல் காசா போரினால் கடுமையாக பாதிக்கப்படுவது காசா மக்கள்தான். அந்தவகையில் தற்போது காசா மக்கள் பசி பட்டினியால் உயிரிழக்க நேரிடும் என்று ஐநா எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் காசா போர் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. காசாவின் அமைப்புகளான ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகியவை பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க போராடி வருகின்றன. அதேசமயம் இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள், அந்த அமைப்புகளை தீவிரவாத இயக்கம் என்று அங்கீகரித்துவிட்டன.
இந்த அமைப்புகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடக்கின்ற போரால் அப்பாவி காசா மக்கள் உயிரிழக்கின்றனர். இதனால், உலக நாடுகள் இஸ்ரேலிடம் உடனே போரை நிறுத்தும்படி கூறின. ஆனால், அதனை காதில் வாங்காமல், இஸ்ரேல் அந்த அமைப்புகளை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று கூறிவிட்டது.
போர் காரணமாக காசாவில் உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. சுகாதாரமும் இல்லாமல் பலர் பலியாகினர். இதற்கிடையே ஐநா காசா மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உணவு பொட்டலங்களை அனுப்பி வைக்கிறது. தற்போது இதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐநாவின் உலக உணவு திட்டத்தின் துணை இயக்குனர் கார்ல் ஸ்காவ் கூறுகையில், "இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது மற்றும் வளர்ந்து வரும் பொது சுகாதார நெருக்கடி காரணமாக தெற்கு காசாவில் உணவு விநியோகம் ஆபத்தில் இருக்கிறது. போர் காரணமாக மக்கள் அனைத்தையும் இழந்திருக்கிறார்கள். ஜநா கொடுக்கும் உணவு பொட்டலங்களை நம்பிதான் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தற்போது இதற்கும் வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது." என்று கூறியுள்ளார்.
மேலும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து ஹமாஸ் மூத்த அதிகாரி சமி அபு ஸுஹ்ரி கூறுகையில், "போர்நிறுத்தம், பணயக்கைதிகளை திரும்ப ஒப்படைத்தல் போன்றவற்றை செய்ய தயாராக இருக்கிறோம். போர் நிறுத்தம் என்பது உண்மையான சோதனையாகும். அவர்கள் போர் நிறுத்தத்திற்கு நிஜமாகவே தயாராக இருக்கிறார்களா? என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்." என்று கூறியிருந்தார்.