இந்தியாவின் கலாச்சார ஆன்மாவாகத் திகழும் தீபாவளித் திருநாள், தற்போது உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ (UNESCO), தனது ‘பண்பாட்டுப் பாரம்பரிய பட்டியலில்’ (Intangible Cultural Heritage) தீபாவளியைச் சேர்த்துள்ளது.
இது ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பெருமைமிகு தருணமாகும்.டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையேயான குழுவின் 20-வது அமர்வின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
புலனாகா கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான இந்தக் கூட்டத்தை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறை என்பது கூடுதல் சிறப்பாகும்.
ஏற்கனவே கொல்கத்தாவின் துர்கா பூஜை, குஜராத்தின் கார்பா நடனம், கும்பமேளா, யோகா மற்றும் வேத பாராயணம் உள்ளிட்ட 15 இந்தியக் கூறுகள் இப்பட்டியலில் உள்ளன.
தற்போது தீபாவளியும் இணந்து, உலக அரங்கில் இந்தியப் பண்பாட்டின் மதிப்பைப் பறைசாற்றியுள்ளது.
தலைவர்களின் வாழ்த்து :
இந்த அங்கீகாரம் குறித்துப் பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “தீபாவளி நமது கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளுடன் மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.
இது ஒளி மற்றும் நேர்மையை வெளிப்படுத்துகிறது. யுனெஸ்கோவின் இந்த அங்கீகாரம் தீபாவளியின் புகழை உலகெங்கும் மேலும் அதிகரிக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தீபாவளி வெறும் பண்டிகை மட்டுமல்ல, அது நாட்டை ஒன்றுபடுத்தும் ஒரு நாகரிக நிகழ்வு.
இது“இது இருளின் மீது ஒளியின் வெற்றியையும், அதர்மத்தின் மீது தர்மத்தின் வெற்றியையும் குறிக்கும் பண்டிகை.
இந்த உலகளாவிய அங்கீகாரம் இந்தியக் கலாச்சாரத்தின் பன்மைத்துவத்திற்குக் கிடைத்த வெற்றி,” என்று தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்.
இந்தச் சாதனையின் பின்னணியில் சங்கீத நாடக அகாடமி, பல்வேறு சமூகக் குழுக்கள், நிபுணர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பு முக்கியமானது.
எழுத்துப்பூர்வமாகவும், ஆடியோ-விஷுவல் வடிவிலும் சேகரிக்கப்பட்ட சான்றுகள் தீபாவளியின் கலாச்சார முக்கியத்துவத்தை யுனெஸ்கோவிடம் எடுத்துரைக்க உதவின.
அடுத்த ஆண்டிற்கானப் பட்டியலில் பீகாரின் ‘சத் பூஜை’யை இந்தியா பரிந்துரைத்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியது போல, நமது மரபுகள், மொழிகள் மற்றும் பண்டிகைகள் ஜனநாயகத்தின் கலாச்சார வெளிப்பாடுகள். அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதில் இதுபோன்ற சர்வதேச அங்கீகாரங்கள் முக்கியப் பங்காற்றும்.