

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி வசதியுடன் கூடிய தொப்பியை வழங்க டெல்லி போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது. கடுமையான கோடை காலத்தில் சிறிது நேரம் வெயிலில் பயணிக்க வேண்டும் என்றாலோ அல்லது வெளியில் சென்று வர வேண்டும் என்றாலோ பொதுமக்களுக்கு அதிக சிரமமாக இருக்கும். இ
இந்நிலையில் நாள் முழுக்க கொளுத்தும் கோடை வெயிலில் நின்று கொண்டே பணி புரியும் போக்குவரத்து காவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, டெல்லி போக்குவரத்து துறை இம்முடிவை எடுத்துள்ளது.
இதற்கு முன்னதாக சென்னை, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில், பரிசோதனை முறையில் ஏசி தொப்பிகள் போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கு காவலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போது தலைநகரிலும் ஏசி தொப்பிகளை வழங்க டெல்லி போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது.
பொதுவாக காவலர்கள் தொப்பி அணிவது வழக்கமானது தான். இருப்பினும் கோடை காலத்தில் இந்தத் தொப்பி வெயிலில் இருந்து போதிய பாதுகாப்பை அளிக்காது. இதன் காரணமாக நவீன ஏசி வசதி உடன் கூடிய தொப்பியை போக்குவரத்து காவலர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
ஏசி தொப்பியின் வடிவமைப்பு:
ஏசி தொப்பியில் ஒரு சிறிய மின்விசிறியும், ஒரு குளிரூட்டும் பேட்டும் பொருத்தப்பட்டிருக்கும். மின்சார பேட்டரியில் இயங்கும் இந்த ஏசி தொப்பியை ஒருமுறை சார்ஜ் செய்தாலே, பல மணி நேரம் நீடித்து பலன் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கடுமையான கோடை வெயிலில் இந்த ஏசி தொப்பி போக்குவரத்து காவலர்களின் தலைப்பகுதியை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். கோடையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியிலும் இதே நிலை தான்.
கொளுத்தும் கோடை வெயிலில் நின்று கொண்டே பணிபுரியும் போக்குவரத்து காவலர்களின் சோர்வை போக்கவும், வெப்ப அலைகளில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் ஏசி தொப்பியை வழங்கும் பணிகளில் டெல்லி போக்குவரத்து துறை களத்தில் இறங்கியுள்ளது. போக்குவரத்து காவலர்களின் களப்பணியை எளிமையாக்கும் இந்த நவீன தொழில்நுட்ப முயற்சிக்கு பாராட்டுகள்.
இன்னும் சில வாரங்கள் கோடை வெயில் நீடிக்கும் எனபதில் சந்தேகமில்லை. அதோடு அடுத்த 4 நாட்களுக்கு கடுமையான வெப்பநிலையுடன், வெப்ப அலை வீசும் என வானிலை ஆராய்ச்சி மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆகையால் முடிந்தவரை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.