

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்பினர் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் (பாலன் இல்லம்) போன்ற இடங்களில் உள்ளிருப்புப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டிக்கும் வகையிலும் சென்னையில் உள்ள லயோலா கல்லூரி, தி.நகர் பாலன் இல்லம், சைதாப்பேட்டை, எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் மாணவர்களும், அரசியல் கட்சியினரும் மற்றும் இயக்குனர் அமீர், பாடகர் அறிவு, நடிகர் மன்சூர் அலிகான், வெற்றிமாறன், ரேவதி போன்ற சினிமா பிரபலங்களும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்தல், தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்தல் மற்றும் டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர் சங்கம்(SFI), இள இளைஞர் கூட்டமைப்பு(DYFI) மற்றும் திரைப்படத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் ஆகியோரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் ஜூன் 20ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் மத்திய அமைச்சர்களின் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து இவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். நாடாளுமன்றத்தில் இன்று நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். இருப்பினும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று சிஜேபி அறிவித்துள்ளது.
சிஜேபிக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல பகுதிகளில் உள்ள மாணவர்கள் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். சென்னையிலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறுகின்றன. 3வது நாளாக மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
லயோலா கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் அமைப்பின் சார்பில் கருப்பு உடை அணிந்து நீட் தேர்வுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கும்பகோணம், திருப்பூர், திருநெல்வேலி போன்ற பல பகுதிகளிலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்களை காவல்துறை கைது செய்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததும், மாணவர்களின் போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அருகே மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம். நீட் முறைகேட்டை கண்டித்து டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மே 17 இயக்கத்தினர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.