தமிழகத்தை அச்சுறுத்தும் டெங்கு..! சென்னை உட்பட 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை..!

Dengue fever
Dengue fever
Published on

சென்னை, கோவை என ஐந்து மாவட்டங்களில் டெங்குக்காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருவதாக மாநில அரசின் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக, துறை சார்ந்த அதிகாரிகளுடன் நேற்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரின் கூற்றுப்படி"சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளில் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. டெங்கு நோயை ஏற்படுத்தும் ஏடிஎஸ் வகை கொசு உற்பத்தியை தடுப்பதற்காக உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக டெங்குவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 15,796 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுயசிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ரோல்ஸ்ராய்ஸ் கார் தருமா ஸ்டேட்டஸ்? நம்ம ஸ்டேட்டஸ் உயர இதெல்லாமும் வேண்டும்!
Dengue fever

டெங்கு காய்ச்சலின் பாதிப்புடன் சென்னை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மலேரியா நோயின் பாதிப்பும் அதிகம் காணப்படுகிறது. தவிர திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் டைபாஃய்டு காய்ச்சலும் அதிகம் காணப்படுகிறது.

சென்னை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ஈரோடு, தஞ்சாவூர், கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெங்குக் காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் கடித்த 4 முதல் 10 நாட்களுக்குள் 104 டிகிரி ஃபாரன் ஹீட் அளவுக்கு காய்ச்சலை ஏற்படுத்தும். காய்ச்சலுடன் கடுமையான தலைவலி, கண்களுக்கு பின்னால் வலி, மூட்டு மற்றும் தசை வலி, குமட்டல், வாந்தி, உடலில் தடிப்புகள், சோர்வு மற்றும் பலவீனம் ஆகியவையும் ஏற்படலாம்.

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கு உடலில் ரத்த தட்டையணுக்கள் வேகமாக குறையத் தொடங்குகின்றன.இதனால். கடுமையான வயிற்று வலி, தொடர் வாந்தி, ஈறுகள் அல்லது மூக்கில் இரத்தக் கசிவு, வாந்தி வரும் போது அல்லது மலம் கழிக்கும் போது இரத்தம் வெளியேறுதல், வேகமாக சுவாசித்தல், அமைதியின்மை, கை கால்கள் குளிர்ச்சியடைந்து இரத்த அழுத்தம் குறைதல் ஆகியவையும் ஏற்படலாம்.

டெங்கு வைரஸ் பாதிப்புகளுக்கு எதிராக எந்த எதிர்ப்பு மருந்துகளும் கிடையாது. எனவே அறிகுறிகளை சரி செய்ய சிகிச்சை வழங்கப்படுகிறது. குறிப்பாக உடலில் அதிக அளவுக்கு தண்ணீர் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்கின்றனர். பழச்சாறு, இளநீர், கஞ்சி ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வது சிறந்த சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. அதை எடுத்துக் கொள்ள முடியாதநிலையில், நரம்பு வழியாக திரவங்களை உடலுக்குள் செலுத்துவது, காய்ச்சலுக்கு பாரசிட்டமால் உள்ளிட்ட மருந்துகளை பயன்படுத்துவது போன்றவை சிறந்த சிகிச்சை முறையாக இருக்கின்றன.

டெங்கு உலகின் வெப்பமண்டல, மிதவெப்ப மண்டல பகுதிகளான தென்கிழக்கு ஆசியா, மேற்கு பசிபிக் தீவுகள், லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் பொதுவாக மழைக்காலங்களில் காணப்படுகிறது.

நிலவேம்பு கஷாயம் டெங்கு வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், அஜீரணக் கோளாறுகளை சரி செய்யவும் ஒரு பயனுள்ள மருந்தாக இருக்கிறது. நிலவேம்பு குடிநீர் பொடியை வெந்நீரில் கலந்து குடிப்பது நல்லது.நிலவேம்பு கசப்புச் சுவையுடையதாக இருப்பதால், அதனை நேரடியாக வாயில் போட்டு விழுங்குவதைத் தவிர்க்க வேண்டும். எனவே,டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நோயின் தீவிர பாதிப்புகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நோய்வராமல் தடுப்பதே நல்லது என்பதை முதலில் உணரவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com