டெங்கு, காலராவால் ஒரே நாளில் 11 பேர் பலி… தொடரும் தீவிரம்!
கேரளாவில் சில வாரங்களாக நிறைய நோய்கள் பரவி மக்களின் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
நோய்கள் ஒருபக்கமும், இயற்கை சீற்றங்கள் மறுப்பக்கம் மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. பீகாரில் ஒருமாதக் காலத்தில் மட்டும் மழை மற்றும் வெள்ளத்தால், 70 பேர் பலியானது குறித்த செய்தி வெளியானது. இந்த செய்தி இந்திய மக்களை பெரிதும் அச்சமடைய செய்தது. இதனையடுத்து கேரளாவிலும் நோய்களால் ஒரே நாளில் 11 பேர் பலியான செய்தி மீண்டும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக கேரளாவில் பல்வேறு நோய்கள் பரவக்கூடும். விலங்குகளுக்கும் சரி, மனிதர்களுக்கும் சரி நோய்கள் பரவி உயிர்பலி அச்சத்தை உண்டாக்கும். அந்தவகையில் கேரளாவில் டெங்கு, காலரா, எலிக்காய்ச்சல், வெஸ்ட்நைட் காய்ச்சல் போன்றவை மக்களை தாக்கி உள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சராசரியாக 438 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேருக்கு எலிக்காய்ச்சலும், 4 பேருக்கு காலராவும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ஓரே நாளில் 11 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பலியானவர்களில் கொல்லத்தை சேர்ந்த ஆசிரியர் அஜீஸ் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நிலம்பூர், வள்ளிக்குன்னு, பொதுக்கல்லு, எடக்கரை பகுதிகளிலும் காய்ச்சல் தீவிரம் அடைந்துள்ளதால் அங்கும் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவனந்தபுரம் நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு காலரா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்குள்ளவர்கள் தனிமைபடுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 26 வயது வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
இதனால், கேரளா முழுவதும் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.